சத்தீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், டிச.3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.


5 மாநில தேர்தல்:


மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் ஏற்கனவே நடைபெற்று முடிந்தது. குறிப்பாக மத்தியப் பிரதேச மாநிலத்தில், 230 தொகுதிகளுக்கும் நவம்பர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இங்குள்ள 64,626 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 71.16 சதவீத வாக்குகள் பதிவாகின.


ராஜஸ்தான் மாநிலத்தில், நவம்பர் 25ஆம் தேதி 199 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இங்கு மொத்தம் 74.06 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவிற்கும் இந்த தேர்தலில் நேரடி போட்டி நிலவி வருகிறது. பாஜக அனைத்து இடங்களிலும் போட்டியிடுகிறது, அதே நேரத்தில் 2018 தேர்தலைப் போலவே காங்கிரஸ் அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய லோக்தளத்திற்கு ஒரு தொகுதியை வழங்கிவிட்டு மற்ற தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது. 


2 கட்டமாக நடைபெற்ற சத்தீஸ்கர் தேர்தல்


சத்தீஸ்கர் மாநிலத்தில், 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நவம்பர் 7ஆம் தேதி முதல்கட்டமாகவும் நவம்பர் 17ஆம் தேதி 2ஆம் கட்டமாகவும் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இங்கு மொத்தம் 68.15 சதவீத வாக்குகள் பதிவாகின.  


அதேபோல மிசோரம் மாநிலத்தில், 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. இங்கு அதிகபட்சமாக 78.40 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.     


தற்போது மிசோ தேசிய முன்னணி கட்சியின் தனிப்பெரும்பான்மையில் நடைபெறும் ஆட்சியில், ஜுரம்தங்கா முதலமைச்சராக உள்ளார். மற்றொரு மாநில கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் எதிர்க்கட்சியாக உள்ளது.  இந்த முறை மிசோரம் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமையவே அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்த முறை பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசிய கட்சிகளுக்கும் அங்கு நேரடி போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இன்று தெலங்கானா தேர்தல்


தெலங்கானா மாநிலத்தில், 119 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று (நவ.30) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி, 63.94 சதவிதித வாக்குகள் பதிவாகி உள்ளன.


இங்கு முதலமைச்சர் கே சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்), காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே முக்கியப் போட்டி நிலவும் என நம்பப்படுகிறது. இருப்பினும், தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட பல ஆய்வுகள் பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸுக்கு இடையே மோதல் ஏற்படும் என்று கணித்துள்ளது.  மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் களம் கண்டதால் மக்கள் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்வது சொன்ன?


ஏற்கனவே நிகழ்ந்த கருத்துக்கணிப்பின்படி, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்றும், ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றும், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்றும், மிசோரமில் மிசோரம் தேசிய முன்னணி கைப்பற்றும் எனவும், தெலங்கானாவில் இழுபறி நீடிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


முதலமைச்சர் வேட்பாளரே இல்லாத தேர்தல்


ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி அன்று வெளியாக உள்ளன. இதற்கிடையில் எந்த ஒரு மாநிலத்துக்கும் எந்தக் கட்சியும் முதலமைச்சர் வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.