நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். அதன்படி, 60 தொகுதிகள் கொண்ட திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 


மேகாலயா, நாகாலாந்து - பிப்ரவரி 27 


60 தொகுதிகளை கொண்ட மேகாலயா, நாகாலாந்து  சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.


நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. நாகாலாந்து சட்டசபையின் பதவிக்காலம் மார்ச் 12 ம் தேதியும், மேகாலயா சட்டசபையின் பதவிக்காலம் மார்ச் 15ம் தேதியும், திரிபுரா சட்டசபையின் பதவிக்காலம் மார்ச் 22ம் தேதியும் முடிவடைய இருக்கிறது. 



நாகாலாந்து சட்டமன்ற தேர்தல் அட்டவணை 2023:


நாகாலாந்து சட்டமன்றத்தின் 60 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க, பிப்ரவரி 27-ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. 


மேகாலயா சட்டசபை தேர்தல் அட்டவணை 2023:


மேகாலயா சட்டசபையின் 60 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க, பிப்ரவரி 27-ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது.


திரிபுரா சட்டமன்ற தேர்தல் அட்டவணை 2023:


திரிபுரா சட்டமன்றத்தின் 60 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க, பிப்ரவரி 16-ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. 


ஈரோடு கிழக்கில் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல்:


ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மறைந்ததையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெற இருக்கிறது. 


மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை:


3 மாநில தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதனிடையே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் வகையில், நடப்பாண்டில் மட்டும் 9 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பிட்ட தேர்தலில் கிடைக்கும் முடிவுகள் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மீதான, மற்ற மாநில மக்களின் பார்வையை மாற்றும் என்பதால், இந்த தேர்தல் முடிவுகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சட்டமன்ற விவரம்:


60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில், முதலமைச்சர்  நெய்பியு ரியோ தலைமையில் நாகாலாந்து ஜனநாயக மக்கள் முன்னணி கட்சி ஆட்சி செய்து வருகிறது. மேகாலாயா சட்டமன்றமும் 60 உறுப்பினர்களை கொண்டுள்ள நிலையில், முதலமைச்சர் கான்ரட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி அங்கு ஆட்சி செய்து வருகிறது. 60 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மற்றொரு மாநிலமான திரிபுராவில், முதலமைச்சர் மணிக் சாஹா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்: 


கர்நாடகா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான்,மிசோரம், சத்தீஷ்கார் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் நடப்பாண்டில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.