உத்திரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் மே மாதம் முடிவடைகிறது. அதனால் 5 மாநிலங்களுக்கான தேர்தல் வருகிற மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது.
முன்னதாக இந்தியாவில் கொரோனா பரவல் வேகமாக பரவி வரும் நிலையில் தேர்தல் ரத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து பேசினர். இதனையடுத்து பேசிய மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லாவுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரி சுஷில் சந்திரா , “ 5 மாநிலங்களில் உள்ள 690 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களின் பேரவை ஆயுட்காலம் மார்ச் 15 முதல் மே 14 க்குள் முடிவடைகிறது. 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர், 40 தொகுதிகளை கொண்ட கோவா, 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசம், 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப், 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
அனைத்து வாக்குச்சாவடிகளும் தரைத்தளத்திலேயே அமைக்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம். பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றப்பின்னணி கொண்ட வாக்காளர்களை நிறுத்தும் போது அதற்கான காரணத்தை கூற வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வேட்பாளர்கள் ஆன்லைன் முறையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முன்வர வேண்டும்.
5 மாநில தேர்தலுக்கு 2,15,368 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் 18.34 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கொரோனா, ஒமிக்ரான் பரவல் காரணமாக கூடுதலாக 30.330 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் விதிமுறைகள்
வேட்பாளர்கள் முடிந்த வரை டிஜிட்டல் முறையில் பரப்புரையில் ஈடுபட வேண்டும். நடைபயணம், சைக்கிள் பேரணி ஆகியவற்றிற்கு ஜனவரி 15 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. நேரடி பரப்புரைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க 5 நபர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
மணிப்பூரில் கொரோனா பரவும் விகிதம் 1.1 சதவீதமாக உள்ளது. மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. மார்ச் 10 ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெறும்.” என்றார்