மனைவி இல்லாத ஆண் அரசு ஊழியர்களுக்கு 730 நாள்களுக்கு விடுமுறை.. இது என்ன புதுசா இருக்கே?
மனைவி இல்லாமல் இருக்கும் ஆண் அரசு ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்க அஸ்ஸாம் அரசு முடிவு செய்துள்ளது.

மனைவி இல்லாமல் இருக்கும் ஆண் அரசு ஊழியர்கள், தங்கள் குழந்தைகளை பார்த்து கொள்வதற்காக விடுமுறை அளிக்க அஸ்ஸாம் அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்டுள்ளார்.
குழந்தைகளை பார்த்து கொள்ள விடுப்பு:
Just In




குழந்தை பராமரிப்பு விடுப்பு (CCL) என்பது அரசு ஊழியர்களுக்கான சிறப்பு சலுகையாகும். தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக பெண் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
நோய்வாய்ப்படும் போது, தேர்வுகள் நடக்கும்போது, பிற அத்தியாவசியத் தேவைகளின் போது, முக்கியமான நேரங்களில் தங்கள் குழந்தைகளைப் பராமரிக்க இந்த விடுப்பால் பெண் அரசு ஊழியர்கள் பயனடைகிறார்கள். இந்தியாவின் பிற மாநிலங்களைப் போலவே, அஸ்ஸாமிலும் அரசு ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படுகிறது.
அஸ்ஸாம் அரசின் முக்கிய முடிவு:
இந்த நிலையில், மனைவி இல்லாமல் இருக்கும் ஆண் அரசு ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்க அஸ்ஸாம் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட பதிவில், "சில நேரங்களில் வாழ்க்கை எதிர்பாராத திருப்பங்கள் நோக்கி செல்லலாம்.
ஒரு ஆண் மட்டுமே ஒரு குழந்தையைப் பராமரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். நமது மாநில அரசு ஊழியர்களுக்கு இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால், நாங்கள் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம். இனிமேல், தங்கள் குழந்தைகளைப் பராமரிக்க ஒற்றைத் தந்தையர்களுக்கு (மனைவி இல்லாமல் இருக்கும் ஆண்கள்) குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்க உள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.
யார் யாரெல்லாம் இந்த விடுமுறை எடுக்கலாம்?
அஸ்ஸாம் அரசாங்கத்தின் அரசு ஊழியராக இருக்க வேண்டும். 18 வயது வரையிலான குழந்தைகளை வைத்திருக்க வேண்டும். தாங்கள் பெற்றெடுத்த குழந்தைக்கு மட்டும் இல்லாமல் தத்தெடுக்கப்பட்ட அல்லது சட்டப்பூர்வமாக சார்ந்த குழந்தைகளுக்காகவும் இந்த விடுமுறை எடுத்து கொள்ளலாம்.
தகுதியுள்ள ஆண் ஊழியர்கள் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் (730 நாட்கள்) வரை குழந்தை பராமரிப்பு விடுப்பு எடுத்து கொள்ளலாம். கூடுதலாக, மாற்றுத்திறனாளி குழந்தைகளை வைத்திருக்கும் அரசு ஊழியர்களும் இதனால் பயனடைவார்கள்.