அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் தன்னுடைய வருங்கால கணவரை கைது செய்து பலருடைய பாராட்டை பெற்று இருந்தார். இந்நிலையில் தற்போது லஞ்ச புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


அசாம் மாநிலத்தில் சப்-இன்ஸ்பெக்டராக ஜூன்மோனி ரபா பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் தனக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த ரானா போகாவை லஞ்சம் மற்றும் மோசடி புகாரில் கைது செய்திருந்தார். அதாவது அவர் இவருடைய பெயரை பயன்படுத்தி சிலரை மோசடி செய்திருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு இரண்டு கட்டட ஒப்பந்ததாரர்கள் சப் இன்ஸ்பெக்டர் ரபா மீது புகார் அளித்துள்ளனர். அதில் ரபாவும் அவருக்கு  நிச்சயம் செய்யப்பட்டிருந்த ரானாவும் பணம் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர்கள் இருவரும் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றியுள்ளதாக புகாரில் கூறியுள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பெயரில் கடந்த சில நாட்களாக காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். 




அந்த விசாரணையில் ரபாவும் குற்றம் செய்திருந்தது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அவரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர். அசாம் மாநிலத்தின் லேடி சிங்கம் என்று அழைக்கப்பட்ட ரபா தற்போது லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ரானாவிற்கும் இந்த மோசடிக்கு தொடர்பு உண்டு என்று தெரிவித்து வந்த ரபா தற்போது அந்த மோசடி சம்பவத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.


இவருக்கும் ரானாவிற்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நிச்சயம் நடத்தப்பட்டிருந்தது. அவர்கள் இருவருக்கும் வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இந்தச் சூழலில் கடந்த மாதம் ரானாவை ஒரு மோசடி புகாரில் ரபா கைது செய்திருந்தார். இதனால் இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர். இதற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் ரபா அம்மாநில எம்.எல்.ஏ ஒருவருடன் பேசிய ஆடியோ வெளியானது. அதில் அவர்கள் இருவரும் லஞ்சம் தொடர்பாக பேசியிருந்ததாக கூறப்பட்டிருந்தது. எனினும் அந்த ஆடியோ குறித்து தெளிவான விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண