அசாம் மாநிலத்தில் 30 வயது வாலிபரை காட்டு யானை துரத்தி துரத்தி தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் உள்ள தமர்ஹட் கிராமத்தில் நேற்று முன்தினம் காட்டு யானை அங்கிருந்தவர்களை துரத்திச் சென்றுள்ளது. இதில் 30 வயது வாலிபர் யானை துரத்தியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். வேகமாக ஓடிவந்த யானை நின்று தனது தும்பிக்கையால் அந்த வாலிபரை கடுமையாக தாக்கியது.
இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் யானையை நோக்கி சத்தமிட்டவுடன் யானை அங்கிருந்து சென்றதாக தெரிகிறது. யானை தாக்கியதில் படுகாயமடைந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். “தாக்குதலுக்குப் பிறகு, காயமடைந்தவர் முதலில் தாமர்ஹட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், அவரை துப்ரி அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்” எனத் தெரிவிக்கின்றனர்.
யானை வாலிபரை தாக்கும் காட்சியை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், காட்டு யானை நெற்பயிரில் கீழே விழுந்த வாலிபரை துரத்திச் சென்று தாக்குவதைக் காணலாம்.
துப்ரி மாவட்டத்தில் உள்ள தமர்ஹட் பகுதிக்கு அருகே உள்ள உன்பெட்லா கிராமத்தில் காட்டு யானை சனிக்கிழமை காலை நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யானை இன்னும் அதேப்பகுதியில் சுற்றித்திரிவதாகவும் அதனை உடனே பிடித்து வனத்துறையில் விட வேண்டும் எனவும் வனத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்