அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தெலங்கானா ஹைதராபாத்தில் நடைபெற்ற பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, மேடையில் அழையா விருந்தாளியாக வந்த ஒருவர், அங்கு வைக்கப்பட்டிருந்த மைக்கை பிடுங்க முயற்சி செய்தார். 






எந்த வித பதற்றமும் அடையாத ஹிமந்தா பிஸ்வா சர்மா, சிரித்து கொண்டே அவரை எதிர்கொள்வது வீடியோவில் பதிவாகியுள்ளது. அவரும் ஹிமந்தாவை பார்த்து ஏதோ பேசுவது போல தெரிகிறது.


தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவின் கட்சியினர் அணியும் நிறத்தில் அந்த நபர் துண்டை அணிந்திருந்தார். அசம்பாவிதம் எதுவும் நடைபெறுவதற்கு முன்பே அந்த நபர் மேடையில் இருந்து இறக்கப்பட்டார். பாகியநகர் கணேஷ் உத்சவ் சமிதி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விநாயகர் விழா நிகழ்ச்சி விருந்தினராக ஹிமந்தா ஹைதராபாத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.


அஸ்ஸாம் முதலமைச்சர், நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலுக்குச் சென்றபோது, ​​தெலுங்கானா முதலமைச்சர் மீது கடும் விமர்சனங்களை மேற்கொண்டிருந்தார்.


"முதலமைச்சர் கேசிஆர், பாஜக இல்லாத அரசியல் பற்றி பேசுகிறார். ஆனால், நாங்கள் குடும்பம் இல்லாத அரசியல் பற்றி பேசுகிறோம். ஹைதராபாத்தில் அவரது மகன் மற்றும் மகளின் படங்களை நாங்கள் இன்னும் பார்க்கிறோம். குடும்ப அரசியலில் இருந்து விடுபட வேண்டும். ஒரு அரசு நாட்டுக்காக, மக்களுக்காக இருக்க வேண்டும்.






ஆனால், ஒரு குடும்பத்திற்காக இருக்கக்கூடாது. நாட்டில் தாராளவாதிகள் அடங்கிய குழுவும் மரபுவழி சார்ந்தவர்கள் அடங்கிய குழுவும் உள்ளது. மேலும் இரண்டிற்கும் இடையே பிளவு எப்போதும் இருந்து வருகிறது. அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலும் 2024ஆம் ஆண்டு, பொதுத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், பாஜக, கேசிஆரின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகள், ஒருவரை ஒருவர் கடுமையாக சாடி வருகின்றனர். எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து பொது தேர்தலுக்கு முன்னதாக பாஜக எதிர்ப்பு அணியை உருவாக்க கேசிஆர் முயற்சி வருகிறார்.