அசாம் வெள்ளம் :


அசாமில் அதிகப்படியான மழை காரணமாக அந்த மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.  32 மாவட்டங்களில் உள்ள 4,941 கிராமங்களில் 54.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொத்தம் 845 நிவாரண முகாம்கள் மற்றும் 1025 நிவாரண விநியோக மையங்கள் மாவட்ட நிர்வாகங்களால் அமைக்கப்பட்டுள்ளன, அங்கு 2.71 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.







அதிகரிக்கும் உயிரிழப்பு :


நேற்றைய (புதன் கிழமை ) நிலவரப்படி  கடந்த 24 மணி நேரத்தில் 4 குழந்தைகள் உட்பட மேலும் 12 பேர் பலியாகியுள்ளதால் நிலைமை மோசமாகியுள்ளது.  ஹோஜாய் மாவட்டத்தில் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், கம்ரூப்பில் இருவர் உயிரிழந்துள்ளனர், பார்பெட்டா மற்றும் நல்பாரியில் தலா மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் இந்த ஆண்டு  கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் இரண்டிலும் சிக்கி உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. 


மீட்பு பணி :


சிராங் மாவட்டத்தில் நேற்று நிலைமை மோசமடைந்ததால் தீயணைப்பு மற்றும் அவசர சேவை பணியாளர்கள்  அங்கு மீட்பு பணியில் களமிறங்கியுள்ளனர்.பஜாலி, பக்ஸா, பர்பேடா, பிஸ்வநாத், போங்கைகான், கச்சார், சிராங், தர்ராங், தேமாஜி, துப்ரி, திப்ருகர், திமா-ஹசாவ், கோல்பாரா, கோலாகாட், ஹைலகண்டி, ஹோஜாய், கம்ரூப், கம்ரூப் மாநகரம், கர்பி அங்லாங்ஜ்லிக், மேற்கு, கரீம்கஞ்ச்லிக் , மோரிகான், நாகோன், நல்பாரி, சிவசாகர், சோனிட்பூர், தெற்கு சல்மாரா, தமுல்பூர், தின்சுகியா மற்றும் உடல்குரி மாவட்டங்கள் வெள்ள நீரில் சிக்கியுள்ளனர்.தர்ராங், பர்பேட்டா மற்றும் கம்ரூப் மாவட்டங்களில்  ராணுவம் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை தொடர்ந்து வருகிறது.  இதற்காக ராணுவத்தின் ஏழு கூட்டுப் படைகள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.






 நீர்மட்டம் அபாயத்தை எட்டியது :


கோபிலி, திசாங் மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகளில் பல இடங்களில் அபாய அளவை தாண்டி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுவரையில்  99,026 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.






முதல்வர் நேரில் ஆறுதல் :


முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் ரயிலில் நாகோன்  பகுதிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தார். வெள்ளம் பாதித்த பல்வேறு பகுதிகளை படகின் மூலம்  பார்வையிட்ட அவர், கம்பூர் கல்லூரி மற்றும் ராஹா மேல்நிலைப் பள்ளியில் உள்ள நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களை சந்தித்து பேசினார்.அதே போல மோரிகான் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்து பேசினார். இன்று கச்சாரில் உள்ள சில்சார் பகுதிக்கு செல்லவுள்ளார்.