அசாம் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், 29 மாவட்டங்களில் 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு ஆறுகள் அபாய அளவை தாண்டி பாய்ந்து வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
பாதுகாப்பாக இருக்குமாறு கம்ரூப் (மெட்ரோ) மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு, பரந்த நிலப்பரப்பு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சிவப்பு நிற எச்சரிக்கையை தாண்டி பிரம்மபுத்திரா, திகாரு மற்றும் கொல்லோங் ஆறுகள் அபாய அளவில் பாய்ந்து வருகிறது.
அசாமை திருப்பிப்போட்ட வெள்ளம்: மாலிகான், பாண்டு துறைமுகம் மற்றும் குவாஹாட்டி பெருநகரப் பகுதியில் உள்ள டெம்பிள் காட் பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்ய உள்ளார் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா.
நேற்று இரவு அனைத்து மாவட்ட ஆணையர்களுடன் வெள்ளச் சூழல் குறித்த கூட்டத்திற்கு முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமை தாங்கினார். விதிமுறைகளின்படி நிவாரணம் வழங்குவதில் தாராளமாக இருக்கவும், ஆகஸ்ட் 15க்கு முன்பு, மறுவாழ்வு நடவடிக்கைகள் அனைத்தையும் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
போதுமான நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்ய தலைமை செயலகத்திற்கு துல்லியமான தகவலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் அமைச்சர்கள் தங்கி நிவாரண பணிகளை மேற்பார்வையிட உள்ளனர்.
லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு: அசாம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது. அதோடு, மேலும் மூவர் மாயமாகியுள்ளதாக அரசு தரப்பு தகவல் வெளியிட்டது.
பர்பெட்டா, பிஸ்வநாத், கச்சார், சரைடியோ, சிராங், தர்ராங், தேமாஜி, துப்ரி, திப்ருகர், கோல்பாரா, கோலாகாட், ஹைலகண்டி, ஹோஜாய், ஜோர்ஹட், கம்ரூப், கம்ரூப் பெருநகரம், கிழக்கு கர்பி ஆங்லாங், மேற்கு கர்பி ஆங்லாங், கரீம்கஞ்ச், லக்கிம், லக்கிம், , நல்பாரி, சிவசாகர், சோனித்பூர் மற்றும் டின்சுகியா உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
குறிப்பாக, துப்ரி மாவட்டம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் வசித்து வரும் 2.23 லட்சம் பேர், வாழ்விடம் இழந்து தவித்து வருகின்றனர். தர்ராங் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 1.84 லட்சம் மக்களும் லக்கிம்பூரில் 1.66 லட்சத்துக்கும் அதிகமான மக்களும் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர்.
காசிரங்கா தேசிய பூங்காவின் கிட்டத்தட்ட 80 சதவீத பகுதி வெள்ள நீரால் மூழ்கியுள்ளது. பூங்காவின் 233 முகாம்களில் மொத்தம் 173 நீரில் மூழ்கியுள்ளன. ஜூலை 1 முதல் 3 வரையிலான காலகட்டத்தில் 11 விலங்குகள் இறந்ததாகவும் மேலும் 65 விலங்குகள் மீட்கப்பட்டதாகவும் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
நான்கு மான்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், மீட்கப்பட்ட பின்னர் மோசமான உடல் நிலை காரணமாக ஆறு மான்கள் இறந்தது. நீரில் மூழ்கிய பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 42 மான்களில், 22 மான்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.