காங்கிரஸ் கோரிக்கை விடுத்தால் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க தயார் என அஸ்ஸாம் முதல்வரும் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.


அஸ்ஸாமில் இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் சமகுரி பகுதியில் இஸ்லாமியர்களுக்கு பாஜக தலைவர்கள் மாட்டிறைச்சி வழங்கியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வரும் நிலையில், அதற்கு ஹிமந்த பிஸ்வா சர்மா பதிலடி அளித்துள்ளார்.


அஸ்ஸாமில் BEEF-க்கு தடையா?


குவஹாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சமகுரி தொகுதியானது 25 ஆண்டுகளாக காங்கிரஸ் வசம் இருந்தது. சமகுரி போன்ற ஒரு தொகுதியை காங்கிரஸ் 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் இழந்தது, அதன் வரலாற்றில் மிகப்பெரிய அவமானம். இது பாஜகவின் வெற்றியை விட காங்கிரஸின் தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும்" என்றார்.


சமகுரி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் எம்பி ரகிபுல் ஹுசைனின் மகன் டான்சிலை பாஜகவின் டிப்லு ரஞ்சன் சர்மா, 24,501 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


இதுகுறித்து பேசிய அவர், "இதில், சோகம் என்னவென்றால் ரகிபுல் ஹுசைன் ஒரு நல்ல விஷயத்தைச் சொல்லி இருக்கிறார். மாட்டிறைச்சி சாப்பிடுவது தவறு, இல்லையா? வாக்காளர்களுக்கு மாட்டிறைச்சி வழங்கி தேர்தலில் காங்கிரஸ்-பாஜக வெற்றி பெறுவது தவறு என சொன்னார்.


காங்கிரஸை கோர்த்து விட்ட ஹிமந்த பிஸ்வா சர்மா:


வாக்காளர்களுக்கு மாட்டிறைச்சி வழங்கி காங்கிரஸ் சமகுரியை வென்றதா என்பதை நான் அறிய விரும்புகிறேன். அவருக்கு சமகுரியை நன்றாகத் தெரியும். மாட்டிறைச்சியைக் கொடுத்து சமகுரியை வெல்லலாம் என்று அர்த்தமா?


 






மாட்டிறைச்சியை தடை செய்ய வேண்டும் என்று ரகிபுல் ஹுசைனிடம் சொல்ல விரும்புகிறேன். மாட்டிறைச்சி பற்றி பாஜகவோ, காங்கிரஸோ பேசக் கூடாது. அஸ்ஸாமில் தடை செய்யப்பட வேண்டும் என்பதை மட்டும் அவர் எழுத்துப்பூர்வமாகத் தர வேண்டும். அப்படிச் செய்தால் எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும்" என்றார்.


இதையும் படிக்க: WhatsApp: சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!