அஸ்ஸாமில் குழந்தை திருமணத்திற்கு எதிராக அரசு எடுத்து வரும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக 416 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. 


குழந்தைகளின் அடிப்படை மனித உரிமைகளை குழந்தை திருமணங்கள் மறுக்கின்றன. சுரண்டலுக்கு உள்ளாக்குகிறது. குழந்தை திருமணங்களும் அதனால் ஏற்படும் கர்ப்பமும் குழந்தை இறப்புக்கும் தாய் இறப்புக்கும் பாலியல் தொற்று போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.



குழந்தை திருமணத்தால் ஏற்படும் பிரச்னைகள்:


அதோடு, பெண்களின் பள்ளி கல்வியை கைவிட செய்கிறது. அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வாய்ப்புகளை மட்டுப்படுத்துகிறது. இதை தவிர, குடும்ப வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகிறது. வறுமையில் தள்ளுகிறது. பொருளாதார வாய்ப்புகளை பறிக்கிறது.


குழந்தைத் திருமணத்தால் குழந்தைகளுக்கு மன ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பிரச்னைகள் ஏற்படலாம். சமூக தனிமைப்படுத்தலுக்கும், குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்தும் துண்டிக்கப்படுவதற்கும் குழந்தை திருமணம் வழிவகுக்கும். சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் மரபுகளை மீறுகிறது.


இந்த நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தில் குழந்தை திருமணத்திற்கு எதிராக அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 416 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இதுகுறித்து அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், "குழந்தை திருமணத்திற்கு எதிரான போராட்டத்தை அஸ்ஸாம் தொடர்ந்து வருகிறது.


அஸ்ஸாம் அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை:


3 ஆம் கட்ட நடவடிக்கையாக கடந்த டிசம்பர் 21-22 இரவு 416 பேர் கைது செய்யப்பட்டனர். 335 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்த சமூகக் கொடுமையை முடிவுக்குக் கொண்டுவர நாம் தொடர்ந்து துணிச்சலான நடவடிக்கைகளை எடுப்போம்" என பதிவிட்டுள்ளார்.


 






கடந்த 2023 ஆம் ஆண்டு, பிப்ரவரி மற்றும் அக்டோபர் மாதங்களில் குழந்தை திருமணத்திற்கு எதிரான இயக்கத்தை மாநில அரசு இரண்டு கட்டங்களாக மேற்கொண்டது. பிப்ரவரி மாதத்தில் முதற்கட்டமாக 3,483 பேர் கைது செய்யப்பட்டு, 4,515 வழக்குகள் பதிவு செய்யப்பட்டனர். அக்டோபர் மாதத்தில் இரண்டாவது கட்டமாக 915 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


இதையும் படிக்க: DMK vs AIADMK Clash : "ரயில்வே கேட் அருகே வா" - திமுக பிரமுகருக்கு மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி...!