"நகரங்களுக்கும் மாவட்டங்களுக்கும் ராமர், கிருஷ்ணர் என்றுதான் பெயர் சூட்ட வேண்டும். நமது கலாசாரத்திற்கு தொடர்பில்லாத நகரங்களின் பெயர்களை மாற்ற வேண்டும்" என அஸ்ஸாம் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு, பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே, பல பாரம்பரிய நகரங்கள், நினைவு சின்னங்களுக்கு வேறு பெயர்கள் சூட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக, இஸ்லாமிய பெயர் கொண்ட இடங்களின் பெயர் மாற்றப்பட்டு வருவதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
பெயர் மாற்றும் படலம்:
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தின் பெயரை பிரயாக்ராஜ் என யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மாற்றியது. சமீபத்தில், குடியரசு தலைவர் மாளிகையில் அமைந்துள்ள தோட்டத்திற்கு அமிர்த உத்யன் என பெயர் மாற்றப்பட்டது.
முன்னதாக, இது முகலாயர் தோட்டம் என அழைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, நாட்டின் பழமைவாய்ந்த நகரங்களில் ஒன்றாக உள்ள ஹைதராபாத்துக்கு பாக்கியநகர் என பெயர் மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிராவில் உள்ள அகமதுநகருக்கு அகல்யாநகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், நகரங்களுக்கும் மாவட்டங்களுக்கும் ராமர், கிருஷ்ணர் என்றுதான் பெயர் சூட்ட வேண்டும் என அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். ஜார்க்கண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரான ஹிமந்த பிஸ்வா சர்மா இந்த கருத்தை தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
என்ன சொன்னார் ஹிமந்த பிஸ்வா சர்மா?
செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய அவர், "ஹுசைனாபாத்துக்கும் ஜார்க்கண்ட்-க்கும் என்ன தொடர்பு? ஜார்க்கண்டின் நகரங்களுக்கும் மாவட்டங்களுக்கும் ராமர், கிருஷ்ணா, நிலம்பர், பிதாம்பர் என பெயர் இருக்க வேண்டும் என்று நான் சொன்னேன்.
ஆனால், கலாச்சாரத்துடன் தொடர்பில்லாத பெயர்களை நகரத்திற்கு நீங்கள் வைக்கிறார்கள் என்றால் அதன் (நகரம்) பெயரை மாற்ற வேண்டும். கொல்கத்தா பெயரும் மாற்றப்பட்டது. இங்குள்ள பெயரையும் மாற்ற வேண்டும். இதையும் முதலமைச்சரிடம் பரிந்துரை செய்கிறேன்" என்றார்.