கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அயோத்தியை போன்றே ஞானவாபி மசூதி வழக்கு, மதுரா மசூதி வழக்கு தொடர் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

  


ஞானவாபி மசூதி வழக்கு:


உத்தரப் பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இங்கு, ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். இந்த மசூதிக்கு உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பதாகவும், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி, இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா என்பதை அறிய, அங்கு ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி இந்துக்கள் தரப்பு மனு தாக்கல் செய்தனர்.


காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதை எதிர்த்து மசூதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த மசூதி தரப்பு மூத்த வழக்கிறிஞர் உசேஃபா அகமாதி, "வரலாற்றைத் தோண்டும் செயலில் இந்திய தொல்லியில் துறை ஈடுபட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறும் செயலில் ஈடுபட்டுள்ளது. சகோதரத்துவம் மற்றும் மதச்சார்பின்மைக்கு இடையூறாக இருக்கிறது.


வரலாற்றில் 500 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை  தோண்டி எடுக்க முயற்சி செய்கிறது இந்திய தொல்லியல் துறை. கடந்த கால காயங்களை மீண்டும் திறக்க முயற்சிக்கிறது" என வாதிட்டார்.


ஆனால், வழக்கை விசாரித்த இந்தியா தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. 


இந்திய தொல்லியல் துறை கூறுவது என்ன?


இந்த நிலையில், ஞானவாபி மசூதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்து இந்திய தொல்லியல் துறை இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்திய தொல்லியல் துறையின் சார்பாக நீதிமன்றத்தில் அஜரான வழக்கறிஞர் அமித் ஸ்ரீவஸ்தவா, "இன்று நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் அறிக்கை சமர்பித்தோம். வரும் டிசம்பர் 21ஆம் தேதி, நீதிமன்றம் இந்த அறிக்கையை பரிசீலிக்கும்" என்றார்.


கடந்த டிசம்பர் 12ஆம் தேதி நடந்த கடைசி விசாரணையின் போது, ​கண்காணிப்பு தொல்லியல் ஆய்வாளர் அவினாஷ் மொகந்திக்கு திடீரென ரத்த அழுத்தம் ஏற்பட்டதாகக் கூறி அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வாரம் கூடுதல் அவகாசம் கோரியது. அப்போது நீதிமன்றம் கூடுதல் அவகாசம் அளித்தது. அறிக்கை தாக்கல் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு வழங்கப்பட்ட அவகாசம் 8 முறை நீட்டிக்கப்பட்டது.


வழிபாட்டு தலங்கள் சட்டம், 1991இன்படி, "கடந்த 1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அன்று, வழிபாட்டு தலங்கள் எப்படி இருந்ததோ, அதன்படியே தொடர வேண்டும். அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது, இந்த சட்டத்தை மீறி, ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.