கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து, கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்க தொடங்கியது. அதை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது உருமாறி கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருக்கிறது. கொரோனாவில் இருந்து டெல்டா, பின்னர், ஒமைக்ரான் என கொரோனா வைரஸ் உருமாறி மக்களை அச்சுறுத்தி வந்தது. சமீப காலமாகத்தான், கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது.


கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு:


இச்சூழலில், கடந்த சில வாரங்களாகவே கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனால், அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அப்போது, கேரளாவில் JN.1 புதிய வகை கொரோனா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. 


அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில், இந்த வகை கொரோனா பரவிய நிலையில், தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு மேற்கொண்ட கண்காணிப்பு பணிகளின்போது புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ராஜீவ் பால் தெரிவித்துள்ளார். 


புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, "காய்ச்சலால் (ILI) பாதிக்கப்பட்டவர்களும் கடுமையான சுவாச நோய்த்தொற்றால் (SARI) பாதிக்கப்பட்டவர்களும் கொரோனா பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். கொரோனா பாதிப்பு உறுதியாகும் பட்சத்தில், மரபியல் தொடர்பான ஆய்வுக்காக அனுப்பப்படுகிறது.


"யாரும் பீதி அடைய வேண்டாம்"


கடந்த 8ஆம் தேதி, கேரள மாநிலம் கற்குளத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது RT-PCR சோதனை மூலம் தெரிய வந்தது. பாதிக்கப்பட்டவருக்கு காய்ச்சலும் (ILI) லேசான அறிகுறிகள் இருந்தன. பின்னர், கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.


கேரளாவில் தற்போது 1,324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி 700 முதல் 1,000 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனை விகிதம் கேரளாவில்தான் அதிகம் பதிவாகியுள்ளது. இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களில் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் 2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தேவையின்றி யாரும் பீதி அடைய வேண்டாம் என கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இது தொடர்பாக சுகாதாரத் துறையும் உரிய ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள், அறைகள், ஆக்ஸிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் மற்றும் காற்றோட்டங்கள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சமீபத்தில், BA.2.86 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கடந்த ஜூலை 17 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 14 லட்சம் பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2,300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அதற்கு முன்பான 28 நாள்களை ஒப்பிடுகையில், கொரோனா வைரஸ் பரவல் 63 சதவிகிதம் அதிகரித்தது. ஆனால், இறப்பு விகிதம் 56 சதவிகிதம் குறைந்தது.