ராஜஸ்தானில் தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அக்கட்சியின் மூத்த தலைவர் கெலாட் முதலமைச்சராகவும் இளம் தலைவர் சச்சின் பைலட் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.


2020ஆம்  ஆண்டு நடந்தது என்ன?


தொடக்கத்தில், முதலமைச்சர் பதவியைதான் சச்சின் பைலட் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கெலாட்டுக்கு இருந்ததால், அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதன் காரணமாக, இருவருக்கும் இடையே தொடர் அதிகார போட்டி நிலவி வந்தது. 


இதற்கிடையே, கடந்த 2020ஆம் ஆண்டு, கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு 18 சட்டப்பேரவை உறுப்பினர்களும் போர்க்கொடி தூக்கினர். காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலைக்கு சென்ற நிலையில், டெல்லி தலைமையின் தலையீட்டின் காரணமாக ஒரு மாதம் நீடித்த பிரச்னை முடிவுக்கு வந்தது. பின்னர், துணை முதலமைச்சராகவும் மாநில தலைவர் பதவியில் இருந்து பைலட் நீக்கப்பட்டார்.


இருப்பினும், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் முயற்சியில் சச்சின் பைலட் சமாதானம் செய்யப்பட்டு தற்போது கட்சியில் தொடர்ந்து வருகிறார். இருந்தபோதிலும், பைலட், கெலாட்டுக்கு இடையேயான பிரச்னை முடிந்தபாடில்லை.


கொளுத்தி போட்ட ராஜஸ்தான் முதலமைச்சர்:


இந்நிலையில், ஆட்சி கவிழும் நிலைக்கு சென்றபோது, காங்கிரஸ் ஆட்சியை பாஜக தலைவர்கள் காப்பாற்றியதாக கூறி அரசியலில் புயலை கிளப்பியுள்ளார் அசோக் கெலாட். தோல்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சரும் பாஜகவின் முக்கிய தலைவருமான வசுந்தரா ராஜே மற்றும் இரண்டு பாஜக தலைவர்கள், 2020ஆம் ஆண்டு, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியபோது ஆட்சியை காப்பாற்றினர்" என தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, முன்னாள் சட்டசபை சபாநாயகர் கைலாஷ் மேக்வால், எம்.எல்.ஏ ஷோபராணி குஷ்வா ஆகிய மூன்று பாஜக தலைவர்களின் ஆதரவின் காரணமாகவே ஆட்சியை காப்பாற்ற முடிந்தது. 


(மத்திய அமைச்சர்கள்) அமித் ஷா, கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோர் சேர்ந்து எனது அரசை கவிழ்க்க சதி செய்தனர். அவர்கள் ராஜஸ்தானில் பணத்தை விநியோகம் செய்தனர். அவர்கள் இப்போது வரை பணத்தை திரும்பப் பெறவில்லை. அவர்களிடம் (எம்.எல்.ஏ.க்கள்) பணத்தை ஏன் திரும்பக் கேட்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.


எம்.எல்.ஏ.க்களிடம், 10 கோடி ரூபாய் அல்லது 20 கோடி ரூபாய் என எவ்வளவு பணம் வாங்கியிருந்தாலும், நீங்கள் எதையாவது செலவு செய்திருந்தால், அந்த பகுதியை நான் தருகிறேன் அல்லது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் இருந்து பெற்று தருகிறேன் என்று கூறியுள்ளேன்.


எம்.எல்.ஏ.க்கள் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றால், அமித்ஷாவின் அழுத்தத்தில் அவர்கள் எப்போதும் இருப்பார்கள். அவர் மத்திய உள்துறை அமைச்சர். மிரட்டுவார். மகாராஷ்டிராவில் சிவசேனாவை பிளவுபடுத்தியுள்ளனர்" என்றார். இந்தாண்டின் இறுதியில், ராஜஸ்தானில் சட்டரப்பேரவை தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.