ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் நேற்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தனர். கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் நீதிபதி ஹேமந்த் குப்தா தடை செல்லும் என்றும், சுதான்சு துலியா தடை செல்லாது என்றும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி இருந்தனர்.


2 நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கு பெரிய அமர்வுக்கு மாற்றப்பட உள்ளது. இந்நிலையில், ஹிஜாப் குறித்து பேசியுள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும் ஹைதராபாத் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி, "ஹிஜாப் அணிவது இஸ்லாமிய பெண்களை அவர்களின் சகாக்களை விட குறைவானவர்களாக ஆக்குவதில்லை. மேலும், எதை அணிய வேண்டும் என தேர்வு செய்வது அவர்களின் உரிமை" என்றார்.


 






இது தொடர்பாக விரிவாக பேசிய அவர், "நீங்கள் ஹைதராபாத் வந்தால், மிகவும் மோசமான ஓட்டுனர்களாக எங்கள் சகோதரிகள்தான் இருப்பார்கள். அவர்களுக்குப் பின்னால் உங்கள் வாகனத்தை ஓட்டாதீர்கள். எனது ஓட்டுனரை கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்வேன். 


யாரேனும் அவர்களை வற்புறுத்தி எதையாவது செய்ய வைக்க முடியுமா என்பதை மோட்டார் சைக்கிளில் அவர்களுக்கு பின் சீட்டில் உட்கார்ந்து சவாரி செய்யும்போது புரிந்து கொள்ளலாம். பள்ளிகளின் வாசலுடன் அடிப்படை உரிமைகள் நின்று விடுகிறதா?


இஸ்லாமிய பெண்கள் தலையை மறைப்பதால் அவர்கள் மனதையும் மறைப்பதாக அர்த்தமில்லை. நாங்கள் எங்கள் பெண்களை மிரட்டுகிறோம் என்கிறார்கள். இப்போதெல்லாம் யார் பயப்படுகிறார்கள்? இது மற்ற மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முஸ்லிம்கள் தாழ்ந்தவர்கள் என்பதை உணர்த்துகிறது.


ஹிந்து, சீக்கியர் மற்றும் கிறிஸ்தவ மாணவர்கள், தங்களது மத அடையாளங்களுடன் வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு, ஒரு முஸ்லீம் நிறுத்தப்பட்டால், அவர்கள் முஸ்லிம் மாணவரைப் பற்றி என்ன நினைப்பார்கள்? வெளிப்படையாக, முஸ்லிம்கள் நமக்குக் கீழே இருப்பதாக அவர்கள் நினைப்பார்கள்.


இதை நான் முன்பே சொன்னேன். மீண்டும் சொல்கிறேன். பலருக்கு வயிற்று எரிச்சல், நெஞ்சுவலி வந்தது. இரவில் தூங்க முடியவில்லை. என் வாழ்நாளில் இல்லையென்றாலும் எனக்குப் பிறகு ஹிஜாப் அணிந்த முஸ்லீம் பெண் இந்த நாட்டின் பிரதமராக வருவார் என்றேன். இது என்னுடைய கனவு. அதில் என்ன தவறு? 


ஆனால், ஹிஜாப் அணியக்கூடாது என்று சொல்கிறீர்கள். பிறகு என்ன அணிய வேண்டும்? பிகினி? அதையும் அணிய உங்களுக்கு உரிமை உண்டு. என் மகள்கள் ஹிஜாபைக் கழற்ற வேண்டும் என்றும் நான் தாடி வைக்கக் கூடாது என்றும் நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள்? இஸ்லாமும் முஸ்லிம் கலாச்சாரமும் என்னுடன் இருக்கக்கூடாது என்று நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள்?" என்றார்.