மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் பேசியது பேசு பொருளாக மாறியுள்ளது. அதில், மக்கள் தொகையை நாட்டின் சொத்தாக மாற்ற, அடுத்த 50 ஆண்டுகளுக்கு அனைவருக்கும் பொருந்தக்கூடிய மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கை தேவை என மோகன் பகவத் என தெரிவித்திருந்தார்.


மத அடிப்படையிலான மக்கள்தொகை சமநிலை என்பது ஒரு முக்கியமான விஷயமாகும், அதை இனி புறக்கணிக்க முடியாது என்றும் பகவத் வலியுறுத்தி இருந்தார்.


இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும் ஹைதராபாத் மக்களவை தொகுதி உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி, எதிர்வினை ஆற்றியுள்ளார். நாட்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை, ஆணுறைகளை அதிகம் பயன்படுத்துபவர்கள் முஸ்லிம்கள் என்று அவர் கூறியுள்ளார்.


 






பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோவை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், அவர், "முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை மாறாக குறைந்து கொண்டே வருகின்றது. முஸ்லிம்களிடையே குழந்தைகளுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது. ஆணுறைகளை அதிகம் பயன்படுத்துபவர் யார்? நாங்கள்தான் பயன்படுத்துகிறோம். இதைப் பற்றி மோகன் பகவத் பேச மாட்டார்" என்றார்.


தேசிய குடும்ப சுகாதார ஆய்வு - 5ஐ மேற்கோள் காட்டி பேசிய அவர், முஸ்லிம்களின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) மிக உயர்ந்த வீழ்ச்சியைக் கண்டுள்ளது. மோகன் பகவத்திடம் கேட்க விரும்புகிறேன். 2000 முதல் 2019 வரை நமது இந்து சகோதரிகளின் லட்சக்கணக்கான மகள்கள் காணாமல் போயுள்ளனர். இது அரசின் புள்ளிவிவரம். ஆனால் அதைப் பற்றி பேச மாட்டார்.


இந்து ராஷ்டிரம் என்பது இந்திய தேசியவாதத்திற்கு எதிரானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது இந்தியாவுக்கு எதிரானது. நாங்கள் மேற்குவங்கத்திற்கு செல்கிறோம். நாங்கள் பி-அணியாக (பாஜகவின்) மாறுகிறோம். மோடி நல்லவர், ஒவைசி கெட்டவர். பாஜக எங்கு ஆட்சியில் இருக்கிறதோ, அங்கெல்லாம் முஸ்லிம்கள் திறந்தவெளிச் சிறையில் வாழ்கிறார்கள்.


இதுதானா நமது மானம்? மிஸ்டர் பிரதமர், நீங்கள் குஜராத்தைச் சேர்ந்தவர். நீங்கள் முதலமைச்சராக இருந்தீர்கள், உங்கள் மாநிலத்தில் முஸ்லிம்கள் தூணில் கட்டப்பட்டு கசையடிக்கு ஆளாகின்றனர். அப்போது, கூட்டம் விசிலடிக்கிறது. தயவு செய்து நீதிமன்றத்தை மூடுங்கள், காவல்துறையை பணிநீக்கம் செய்யுங்கள்" என்றார்.