பிபர்ஜாய் புயல் இன்று கரையை கடக்கும் நிலையில், கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பிபர்ஜாய் புயல்:
13.06.2023 அன்று வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய அதித்தீவிர புயல் “பிபர்ஜாய், வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து நேற்று (14.06.2023) காலை 08:30 மணி அளவில் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், ஜக்காவு துறைமுகத்திலிருந்து (குஜராத்) மேற்கு-தென்மேற்கே சுமார் 280 கிலோமீட்டர் தொலைவில், தேவ்பூமி துவாரகா (குஜராத்) இருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 290 கிலோமீட்டர் தொலைவில், போர்பந்தரில் (குஜராத்) இருந்து மேற்கு-வடமேற்கே சுமார் 340 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் இன்று மாலை, மிகத்தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்)-மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே, ஜக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125-135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
இதனை தொடர்ந்து மாநில மற்றும் மத்திய அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குஜராத் கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குஜராத் கடலோர பகுதிகளில் இருக்கும் 10,000 பேர் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
'பிபர்ஜாய்' புயல் குஜராத்தின் கடலோரப் பகுதிகளை நெருங்கி வரும் நிலையில், புயலைச் சமாளிப்பதற்கான ஆயுதப் படைகளின் தயார்நிலை குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டார். "முப்படை தலைவர்களிடமும் பேசி, 'பிபர்ஜாய்' புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில், ஆயுதப் படைகளின் தயார்நிலையை மதிப்பாய்வு செய்தேன். இந்த அதி தீவிர புயலை எதிர்கொள்ள முப்படை வீரர்கள் தயார்நிலையில் உள்ளனர்" என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
ரான் முதல் குஜராத் வரை இந்த புயலின் தாக்கம் இருக்கும் என்பதால், எல்லைப் பாதுகாப்புப் படையும் (பிஎஸ்எஃப்) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசும் என்பதால் பயிர்கள், கடலோர பகுதியில் இருக்கும் வீடுகள், மின் கம்பங்கள் ஆகியவை கடும் சேதமடையும் நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் அலைகள் 6 முதல் 14 மீட்டர் உயரம் வரை எழ வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.