போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் மும்பை ஆர்தர் சாலை சிறையில் இருந்து சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையாகும் தனது மகனை வரவேற்க ஷாருக் கான் ஆர்தர் சிறைக்கு விரைந்தார். 


 






 


ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் சுமார் 25 நாள்களுக்கு முன், போதை மருந்து வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு போதை மருந்து தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ஆர்யன் கானுக்கு இந்த வழக்கில் ஷாரூக் கான் தரப்பில் இருந்து ஜாமீன் பெறுவதற்காகக் கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து ஜாமீன் அளிக்க மறுத்து வந்த நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 


இதனையடுத்து, நேற்று சிறையில் இருந்து வெளிவருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜாமீன் தொடர்பான ஆவணங்கள் சிறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இதன், காரணமாக நேற்று ஆர்யன் கானின் விடுதலை தாமதமானது. 






இந்நிலையில், இன்று காலையில் ஜாமின் நடைமுறைகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும், ஆர்யன் கான் எப்போது வேண்டுமானலும் வெளியே வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


முன்னதாக, வழக்கில் வெளியிட்டுள்ள ஜாமீன் உத்தரவில் ஆர்யன் கான் ஒவ்வொரு வெள்ளிக் கிழமை அன்றும் போதை மருந்து தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்றும், தனது பாஸ்போர்டைச் சமர்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


 






 


இந்த வழக்கில் ஆர்யன் கானுடன் சிறையில் அடைக்கப்பட்ட அர்பாஸ் மெர்சண்ட், முன்முன் தாமேச்சா ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆர்யன் கானின் கைது குறித்து பல்வேறு பாலிவுட் கலைஞர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இதுவரை நடிகர் ஷாரூக் கானோ, அவரது மனைவி கௌரி கானோ எந்தக் கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.       


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண