டெல்லியில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான வழக்கில் நேற்று அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதனை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போக்கிரித்தனம் எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே மதுபானக் கொள்கை வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சத்யேந்தர் ஜெயின், டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் விரைவில் கைது செய்யப்படுவார் என கூறப்பட்டு வரும் நிலையில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தியுள்ளனர்.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ஐந்து முறை சம்மன் அனுப்பியும் இதுவரை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை என அமலாத்துறை தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றது. வரவிருக்கும் மக்களவை பொதுத் தேர்தலில் தன்னை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கவே மத்திய அரசின் அழுத்ததினால் அமலாக்கத்துறை தனக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். இதுமட்டும் இல்லாமல் அரசியல் சதியின் ஒரு பகுதியாக இந்த நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
இப்படியான நிலையில் டெல்லியில் 12 இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர். இதில் ஆம் ஆத்மி கட்சியின் பொருளாளரும், எம்.பி.,யுமான குப்தா வீட்டிலும், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் மற்றும் நெருக்கமானவர்கள் வீட்டில் இந்த சோதனையானது நடைபெற்றது. முதலமைச்சருக்கு சொந்தமான மற்றும் நெருங்கிய வட்டாரங்களுக்குச் சொந்தமான இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதால், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்பட்டது. இந்த திடீர் சோதனை டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது தொடர்பாக டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்,
”இன்று எனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீட்டில் 23 ED அதிகாரிகள் 16 மணிநேரம் சோதனை நடத்தினர். தீவிர சோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகு எதுவும் கிடைக்கவில்லை என்பதால் திரும்பிச் சென்றுள்ளனர். இன்னும் சொல்லப்போனால் ஒரு பைசா கூட அமலாக்கத்துறையினருக்கு கிடைக்கவில்லை. நகைகள் உள்ளிட்ட எந்த வகையான பொருட்களோ ஆவணங்களோ அமலாக்கத்துறையினருக்கு கிடைக்கவில்லை. மணீஷ் சிசோடியா வீட்டில் சோதனை நடத்தியதில் அங்கு எதுவும் கிடைக்கவில்லை.
அமலாக்கத்துறையினர் சத்யேந்திர ஜெயின் இடத்தில் சோதனை நடத்தினர், அங்கு எதுவும் கிடைக்கவில்லை. சஞ்சய் சிங்கின் இடத்தை சோதனை செய்தனர், அங்கு எதுவும் கிடைக்கவில்லை. எந்த காரணமும் இல்லாமல் அமலாக்கத்துறை யாருடைய வீட்டிற்கும் நுழைய முடியுமா? இது சுத்த போக்கிரித்தனம் இல்லையா? இந்த ரெய்டுகள், கைதுகள் அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகவும், எங்களை தொந்தரவு செய்வதற்காகவும், ஆம் ஆத்மி கட்சியை நசுக்குவதற்காகவும் மட்டுமே செய்யப்படுகின்றன என்பது தெளிவாகிறது.
இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகிறது. ஒரு புதிய பைசா அல்லது எந்த ஆதாரமும் அமலாக்கத்துறைக்கு கிடைக்கவில்லை. இந்த நாடு சட்டம் மற்றும் அரசியலமைப்பின் கீழ் இயங்குகிறது. இந்தியா யாருடைய வாரிசும் அல்ல. இந்த நாட்டில் 140 கோடி மக்கள் உள்ளனர். இதுபோன்ற துரோகத்தை மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.