பெரும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து இடைக்கால பிணையில் வெளியே வந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்த அரவிந்த் கெஜ்ரிவால், பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.


புயலை கிளப்பும் அரவிந்த் கெஜ்ரிவால்:


டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து தான் விலகினால், அடுத்ததாக மம்தா, பினராயி விஜயன் அரசுகள் கவிழ்க்கப்படும் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


ஆம் ஆத்மி கட்சியை பாஜக டார்கெட் செய்வதாக கூறுவதற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த கெஜ்ரிவால், "ஆம் ஆத்மி கட்சியின் அபரிமிதமான வளர்ச்சியே காரணம். பிரதமரை சந்திக்கும் பலர், அவர்களில் சிலர் எங்களின் நண்பர்களாகவும் இருக்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சி பற்றி தங்களிடம் பிரதமர் அடிக்கடி பேசுவதாக அவர்கள் எங்களிடம் கூறுகிறார்கள். எதிர்காலத்தில் ஆம் ஆத்மி கட்சி தேசிய அளவிலும் பல மாநிலங்களிலும் தங்களுக்கு சவால் விடும் என பிரதமர் கூறியதாக அவர்கள் கூறினார்கள். 


எனவே, எங்களை மொட்டுக்களாக இருக்கும்போதே நசுக்க விரும்புகிறார்கள். வளரும் முன் ஆம் ஆத்மியை நசுக்க விரும்புகிறார்கள். சமீப நாள்களாக, ‘ஆபரேஷன் ஜாது’வை நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக அவர்கள் ஆம் ஆத்மி தலைவர்களை கைது செய்கிறார்கள்.


"தோற்கும் இடங்களில் முதலமைச்சர்களை கைது செய்யும்":


தேர்தலுக்குப் பிறகு எங்களின் வங்கி கணக்குகளை முடக்குவோம் என்று ராஜு (கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ் வி ராஜு) அறிக்கை அளித்துள்ளார். எங்கள் அலுவலகத்தை காலி செய்வதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.


ஆனால், ஆம் ஆத்மி கட்சி நான்கு பேர் கொண்ட கட்சி இல்லை என்பது அவர்களுக்குப் புரியவில்லை. இது இப்போது நாடு முழுவதும் பரவி வரும் சிந்தனை. கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் நாம் செய்திருக்கும் பணியை, இதுவரை யாரும் பார்த்ததில்லை.


பஞ்சாபில் ஏன் வென்றோம்? ஏனென்றால் டெல்லியில் எங்கள் பணி அங்கு எதிரொலித்தது. குஜராத் மக்கள் எங்களுக்கு ஏன் வாக்களித்தனர்? பஞ்சாப்பிலும் டெல்லியிலும் நாங்கள் செய்த வேலை குஜராத்தில் எதிரொலித்தது.


ஜனநாயகத்திற்கு ஆபத்து:


தொடர்ந்து பேசிய அவர், "டெல்லியில் கெஜ்ரிவாலை தோற்கடிக்க முடியாது என்பதை அவர்கள் (பிஜேபி) புரிந்துகொள்கிறார்கள். ஒரு தேர்தலில் 67 இடங்கள் கிடைத்தன. மற்றொரு சந்தர்ப்பத்தில் 62 இடங்கள் கிடைத்தன.


எனவே, அவர்கள் கெஜ்ரிவாலை ஒரு பொய் வழக்கில் சிக்க வைக்கிறார்கள். அதனால், கெஜ்ரிவால் ராஜினாமா செய்து அவரது ஆட்சியை கவிழ்க்க முடியும் என நம்புகிறார்கள். இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. இன்று நான் பதவி விலகினால் நாளை மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் ஆட்சியை கவிழ்ப்பார்கள்.


பா.ஜ.க. எங்கு தோற்றாலும் முதலமைச்சரை கைது செய்து அவரது ஆட்சியை கவிழ்க்கலாம். இதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட வேண்டும். ஜனநாயகத்தை சிறையில் அடைத்தால், ஜனநாயகம் சிறையிலிருந்து இயங்கும்" என்றார்.