ஆளுநர் விவகாரம் தொடர்பாக இன்று முதலமைச்சர் முக ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது வீட்டில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சந்தித்து பேசினர். இதை தொடர்ந்து 3 மாநில முதலமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “ஜனநாயகத்தை பாதுக்காப்பதற்காகவே திமுகவை நாடி வந்துள்ளோம். டெல்லி மக்களுடன் துணை நிற்பதாக தமிழக அரசு உறுதியளித்துள்ளது. டெல்லி மாநில மக்களின் நலனுக்காக திமுக அரசு தோள் கொடுத்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரத்தை பறிக்கக் கூடாது என உச்சநீதிமன்றமே தெரிவித்திருக்கிறது. மத்திய அரசின் அவசர சட்ட மசோதாவை எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையின் எதிர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “ நான் காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் ராகுல் காந்தியிடம் சந்திப்பு கேட்டுள்ளேன். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன். காங்கிரஸ் எங்களை ஆதரிக்க வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
வரும் மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய கொண்டு வந்த அவசரச்சட்டம் வரும். ராஜ்யசபாவில் அவர்களுக்கு 93 இடங்கள் உள்ளன. பாஜக அல்லாத கட்சிகள் அனைத்தும் வந்தால் அவர்களை தோற்கடிக்க முடியும். மு.க.ஸ்டாலினின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாளுக்கு நாள் நான் மேலும் மேலும் நம்பிக்கையுடன் உணர்கிறேன். மத்திய அரசின் சட்ட மசோதனைவை எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் எதிர்க்க வேண்டும். மாநிலங்களவையில் சட்டத்தை எதிர்த்து வென்றால் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அரையிறுதியில் வென்றதுபோல் இருக்கும். ”என பேசினார்.
மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம் என்ன?
ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவதற்கும், நியமிப்பதற்கும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது என்றும், அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் உட்பட்டவர் என்றும் உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு சாதகமாக அண்மையில் தீர்ப்பு அளித்தது.
உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு, அவசர சட்டம் கொண்டு ஒன்றை கொண்டு வந்தது. அதில், டெல்லி அரசில் அதிகாரிகளின் நியமனம், பணியிடமாற்றம் போன்ற விஷயங்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் துணை ஆளுநருக்கு வழங்கப்படும். இதன் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு புதிய சிக்கல் உண்டானது.