Arvind Kejriwal: மீண்டும் மக்கள் ஆதரவுடன் மட்டுமே, டெல்லி முதலமைச்சர் நாற்காலியில் அமர்வேன் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு:


ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து செவ்வாய்க்கிழமை விலகப் போவதாக அறிவித்துள்ளார். ஆறு மாத சிறைத்தண்டனைக்குப் பிறகு ஜாமீன் பெற்று திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் வெளிநடப்பு செய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “இரண்டு நாட்களுக்குப் பிறகு நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன். மக்கள் தீர்ப்பளிக்கும் வரை நான் முதல்வர் நாற்காலியில் அமர மாட்டேன். நாங்கள் நேர்மையானவர்கள் என்று மக்கள் சொன்னால்தான் நான் முதலமைச்சராகவும், சிசோடியா துணை முதலமைச்சராகவும் மீண்டும் பொறுப்பேற்போம்” என்று தெரிவித்துள்ளார். 


டெல்லியில் முன்கூட்டியே தேர்தல் நடத்த கோரிக்கை:


அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ள டெல்லி சட்டசபை தேர்தலை மகாராஷ்டிராவுடன் சேர்த்து இந்த ஆண்டு நவம்பரில் நடத்த வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.  டெல்லியின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு, ”ஆம் ஆத்மி கட்சி தனது எம்எல்ஏக்களின் கூட்டத்தை அடுத்த இரண்டு நாட்களில் நடத்தும் என்றும், அங்கு எந்த ஆம் ஆத்மி தலைவர் புதிய முதல்வராக பதவியேற்பார் என்பதும் முடிவு செய்யப்படும்” என கூறினார்.


”பாஜகவிற்கு எதிராக நிற்கிறோம்”


தொடர்ந்து பேசுகையில், "எதற்காக பாஜக என்னை சிறைக்கு அனுப்பியது? நான் எந்த ஊழலும் செய்யவில்லை என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆம் ஆத்மியை உடைத்து என் ஆவியை நசுக்க வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள். என்னை சிறைக்கு அனுப்பினால் கட்சி சிதைந்துவிடும், டெல்லியில் பாஜக ஆட்சியை அமைக்க முடியும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் எங்கள் கட்சி உடையவில்லை. அவர்களின் பெரும் சதிகளுக்கு எதிராக வலுவாக நிற்கிறது. 


உச்சநீதிமன்றம் எனக்கு சாதகமாக தீர்ப்பளித்து ஜாமீன் வழங்கியதன் மூலம் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறது. கெஜ்ரிவால் குற்றவாளியா? நேர்மையானவரா? என்று உங்களிடம் கேட்க இன்று நான் மக்கள் மன்றத்திற்கு வந்துள்ளேன். இரண்டு தினங்களில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். மக்கள் தங்கள் முடிவை தெரிவிக்கும் வரை நான் அந்த நாற்காலியில் அமரமாட்டேன்" என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.