அருணாச்சல பிரதேச மாநிலம் பக்கே கெசாங் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் கடவுள் வாழ்த்து பாடல்களை சரியாக பாடாததாலும், சமஸ்கிருத மொழியில் சரி வர மதிப்பெண்களை எடுக்காததாலும் தலைமை ஆசிரியர், மாணவர்களை சரமாரியாக அடித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அருணாச்சல பிரதேச பள்ளியில் நடந்தது என்ன?


இந்த பள்ளியை பதஞ்சலி யோக்பீத் அறக்கட்டளை நடத்தி வருகிறது. மாணவர்களை தாக்கியதாக தலைமை ஆசிரியர் மீது புகார் எழுந்த நிலையில், தலைமை ஆசிரியரை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதை தொடர்ந்து, உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் தங்கியிருந்த அந்த பள்ளியின் தமைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுகுறித்து பக்கே கேசாங்கின் காவல் கண்காணிப்பாளர் (SP) தாசி தரங் கூறுகையில், "1ஆம் வகுப்பு மாணவனின் உடலில் காயங்கள் இருந்ததை பெற்றோர் கவனித்துள்ளனர். இதையடுத்துதான், மாணவர்களை தலைமை ஆசிரியர் தாக்கியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டிசம்பர் 10ஆம் தேதி செய்ஜோசா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.


குழந்தைகளை தாக்கிய பள்ளி முதல்வர்:


காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 342, 323 மற்றும் சிறார் நீதிச் சட்டப் பிரிவு 75இன் கீழ் குழந்தைகளுக்கு கொடுமை செய்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 1ஆம் வகுப்பு முதல் 4 ஆம் வகுப்பு வரை பயிலும் 20 மாணவர்கள் பள்ளி முதல்வரால் தாக்கப்பட்டார்.


தாக்கப்பட்டது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மாணவர்களை அவர் மிரட்டியுள்ளார். பள்ளியில் கடவுள் வாழ்த்து பாடல்களை சரியாக பாடாததற்காக மாணவர்களை தலைமை ஆசிரியர் துன்புறுத்தியுள்ளார். சமஸ்கிருத மொழியில் சரி வர மதிப்பெண்கள் எடுக்காததால் சில மாணவர்கள் தாக்கப்பட்டனர்" என்றார்.


குறிப்பிட்ட இந்த பள்ளி, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யாமல் நடத்தப்பட்டு வருகிறது என அருணாச்சல பிரதேச மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.