அருணாசலப்பிரதேசத்தில் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விமானி மேஜர் ஜெயந்த் என தெரியவந்துள்ளது,
ஹெலிகாப்டர் விபத்து:
அருணாசல பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது. நேற்று காலை 9.15 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் இருந்துள்ளனர்.
இந்த ஹெலிகாப்டர் காலை 9 மணிக்கு சங்கே என்ற பகுதியில் இருந்து புறப்பட்டு அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள மிஸ்ஸமாரிக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது அருணாச்சல பிரதேசத்தின் மண்டாலா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காலை 9.15 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனை அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தேனியைச் சேர்ந்த விமானி உயிரிழப்பு:
அப்போது சிறிது நேரம் கழித்து 2 பேரின் உடல்களை மீட்டனர். அதில் லெப்டினன்ட் கர்னல் விவிபி ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேஜர் ஜெயந்த் தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் இந்திய நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.