குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எல். அதிகாரியான அருண் கோயல் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரு தலைமை தேர்தல் ஆணையர், இரண்டு தேர்தல் ஆணையர்கள் என மூன்று பதவிகள் இருக்கின்றன.


அருண்கோயல் :


கடந்த ஆறு மாதங்களாக காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவிதான் தற்போது நிரப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயலை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


1985 பேட்ச்சைச் சேர்ந்த பஞ்சாப் அதிகாரியான கோயல், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோருடன் தேர்தல் குழுவில் இணைகிறார்.


 






முன்னாள் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுஷில் சந்திரா, இந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, ராஜீவ் குமாரிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்பட பல முக்கிய பிரச்னைகள் எழுந்துள்ள நிலையில், இந்த நியமனம் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.


நேற்று வரை கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த அவர் நேற்று விருப்ப ஓய்வு பெற்றார். முன்னதாக, அவர் டிசம்பர் 31ஆம் தேதி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


வகித்த பதவிகள்:


2019இல் கனரக தொழில்துறை செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, கோயல் கலாச்சார அமைச்சகத்தின் செயலாளராக இருந்தார். டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.


வரும் டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. டிசம்பர் 8ஆம் தேதி, இமாச்சலப் பிரதேசத்துடன் இணைத்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.


குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.