சத்தீஸ்கர் மாநிலத்தில் சுமார் 12 ஆயிரம் ஒப்பந்தப் பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த மே 4 அன்று, ஒட்டுமொத்தமாக பணியில் இருந்து விலகுவதாக கடிதம் வழங்கியுள்ளனர். 


கடந்த மே 3 அன்று, இந்த ஒப்பந்தப் பணியாளர்களுள் 21 துணைத் திட்ட அலுவலர்களைப் பணிநீக்கம் செய்து சத்திஸ்கர் மாநில அரசு உத்தரவு ஆணை பிறப்பித்ததையடுத்து, 12 ஆயிரம் ஒப்பந்தப் பணியாளர்களும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக பணியில் இருந்து விலகியுள்ளனர்.


 கடந்த ஏப்ரல் மாதம் முதல், சத்திஸ்கர் மாநிலத்தில் `நூறு நாள் வேலைத் திட்டம்’ என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்கள் ஆயிரக்கணக்கோர் பணி நிரந்தரம் கோரியும், ஊதிய உயர்வு கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பேசிய தொழிலாளர்களின் சங்கத்தின் துணைத் தலைவர் திகம்சந்த் கௌஷிக், `கடந்த மே 3 அன்று, மாநில அரசு 21 அலுவலர்களைப் பணியில் இருந்து நீக்கியது. அரசின் இந்த முடிவை எதிர்த்தும், எங்கள் போராட்டக் கோரிக்கைகளை நிறைவேற்ற அழுத்தம் தெரிவிக்கும் விதமாக 12371 தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக பணிவிலகல் கடிதம் அளித்துள்ளோம்’ எனக் கூறியுள்ளார். 



தொடர்ந்து அவர், `கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில், தற்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் பணி நிரந்தரம் வழங்குவதாக உறுதியளித்திருந்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் வாழ்க்கையையே இந்தப் பணியில் அர்ப்பணித்திருப்பதால் எங்களுக்கு வேலைப் பாதுகாப்பு வேண்டுகிறோம்’ என்றும் கூறியுள்ளார்.


இந்தப் போராட்டத்தின் விளைவாகக் கடந்த மாதம் சத்திஸ்கர் மாநில அரசு வேலைவாய்ப்பு துணை அதிகாரிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 9540 ரூபாய் என்ற ஊதிய உயர்வை வழங்கியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாகவும், நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஆய்வு மேற்கொள்ளும் வகையிலும் கமிட்டி ஒன்று நியமிக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமாக அரசு தரப்பில் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண