கணவரின் உயிரைக் காக்க காரணமான ஆப்பிள் வாட்ச்சை தயாரித்ததற்காக ஹரியானாவைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆப்பிள் சிஇஓவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் யமுனா நகரில் வசித்து வருபவர் 33 வயதான நித்தேஷ் சோப்ரா, கடந்த ஆண்டு தனது மனைவிக்கு ஆப்பிள் எஸ் 6 வாட்சை பரிசாக அளித்துள்ளார். அது தான் பின்நாளில் அவருடைய உயிரையே காப்பற்றப்போகிறது என அப்போது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. நித்தேஷ் சோப்ராவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடலில் திடீர் அசெளகரியம் ஏற்பட்டுள்ளது. தனது மனைவி நேஹாவிடம் நெஞ்சு வலிப்பதாகவும், மயக்கம் வருவது போல் உள்ளது என்றும் சொல்லியுள்ளார். உடனடியாக அவர், நித்தேஷை ஆப்பிள் வாட்சை அணியச் சொல்லியுள்ளார். அந்த ஆப்பிள் வாட்ச்சில் ஈசிஜி பார்த்த போது, தம்பதி இருவரும் பேரதிர்ச்சி அடைந்தனர். வாட்ச்சில் நித்தேஷ் சோப்ராவின் இதயத்துடிப்பு சரியாக இல்லை என்பதை அறிந்து கொண்ட இருவரும், வேகமாக மருத்துவமனைக்கு விரைந்தனர். மருத்துவமனையில் ஆஞ்சியோகிராபி செய்த பிறகு, நித்தேஷ் சோப்ராவின் உடலில் இதயத்திற்கு ரத்தம் செல்லும் தமனிகளில் 99.9 சதவீதம் அடைப்பு இருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து ஸ்டென்ட் வைத்தால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும் என்றும் கூறியுள்ளனர்.
தற்போது அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நித்தேஷ் சோப்ரா நலமாக உள்ளார். அவர் சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தனது கணவரின் உயிரைக் காத்த ஆப்பிள் வாட்ச் தொழில்நுட்பத்தை கண்டு நேஹா நெகிழ்ந்துள்ளார். ஆப்பிள் வாட்ச் கொடுத்த எச்சரிக்கையால் கணவரின் உயிரைக் காப்பாற்றியதால், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக்கிற்கு மின்னஞ்சல் மூலமாக தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார் அவர். நேஹா தனது மின்னஞ்சலில், "நீங்கள் வழங்கிய ஆப்பிள் வாட்ச் தொழில்நுட்பத்தால் மட்டுமே நாங்கள் மருத்துவமனைக்கு வந்தோம். இப்போது அவர் நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார். நான் உங்களுக்கு எனது அன்பையும், மகிழ்ச்சியையும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் என் கணவரின் உயிரைக் காப்பறியதற்கு நன்றி..." என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக், “நீங்கள் மருத்துவ உதவியை நாடியதற்கும் உங்களுக்குத் தேவையான சிகிச்சையைப் பெற்றதற்கும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதனை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி,” என பதிலளித்துள்ளார்.
பல் மருத்துவரான நித்தேஷ் சோப்ரா தனது மரணத்தில் இருந்து மீண்டது குறித்து கூறுகையில், “30 வயதின் முற்பகுதியில் இருப்பவர்களுக்கெல்லாம் இருதய பிரச்சனைகள் ஏற்படுமா? என ஏற்பட்ட அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் இருந்தேன். ஆனால், கடந்த மார்ச் 12ம் தேதி சனிக்கிழமை எனக்கு ஏற்பட்டது தான் கடைசி வாய்ப்பு. இதயத்தில் ஏதோ பிரச்சனை உள்ளது, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என நினைத்தோம். நாங்கள் மருத்துவமனையை அடைந்ததும், டாக்டர் ஈசிஜி செய்தார், நாங்கள் அதை மானிட்டருடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். நான் CCU-வில் இருந்தபோது, நானும் என் மனைவியும் தொடர்ந்து எங்கள் ஆப்பிள் வாட்ச் வாசிப்பை மானிட்டருடன் ஒப்பிட்டுப் பார்த்தோம், அவை ஒரே மாதிரியான எண்ணிக்கையை கொண்டிருந்தன,” என்று கூறியுள்ளார். ஆப்பிள் வாட்சில் உள்ள ECG செயலி, இதயத் துடிப்பை ஆராயவும், இதயத்தின் மேல் மற்றும் கீழ் அறைகளை கண்காணிக்கவும், இதயத் துடிப்பின் எண்ணிக்கையை சரி பார்க்கவும் உதவுகிறது. இதற்கு முன்னதாகவும் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான ஆப்பிள் வாட்ச் பயனாளர்கள் அதில் உள்ள தொழில்நுட்பம் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.