Toll Pass: அடிக்கடி சுங்கச்சாவடிய கிராஸ் பண்றவங்களா நீங்க.? உங்க காச சேமிக்க சூப்பர் திட்டம் வருது...
அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்வோர் பயனடையும் வகையில், சுங்கச்சாவடிகளில் உங்கள் பணத்தை சேமிக்கும் வகையில், புதிய வருடாந்திர கட்டண முறை அமலுக்கு வர உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இன்றைய சூழலில், வெளியூருக்கு செல்வோர், சுங்கச்சாவடியில் கட்டுவதற்காகவே ஒரு கனிசமான தொகையை ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த பிரச்னையை போக்க, மத்திய அரசு ஒரு சிறப்பான திட்டத்தை கொண்டுவர உள்ளது.
ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி நாடு முழுவதும் பயணிக்கலாம்
தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையிலும், சுங்கச் சாவடிகளில் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது ஒரே ஒரு முறை மொத்தமாக சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி,
- இனி ஆண்டுக்கு ரூ.3,000 சுங்கக் கட்டணமாக செலுத்திவிட்டு, நாட்டிலுள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம்.
- வாழ்நாள் கட்டணமாக 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 கட்டினால், அந்த ஆண்டுகள் முழுவதும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த தேவையில்லை.
லட்சக்கணக்கானோருக்கு பயனளிக்கும் திட்டம்
இந்த திட்டம் அமலாகும் பட்சத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணம் செய்யும் லட்சக்கணக்கானோர் பயனடைவார்கள். மேலும், சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுவதும் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள, மாதம் முழுக்க பயணம் செய்வதற்கு ரூ.340, ஆண்டு முழுக்க பயணம் செய்ய ரூ.4,080 ஆகிய திட்டங்களில் பயனடைந்தோர், இந்த புதிய திட்டம் மூலம் ரூ.1,080-ஐ மிச்சப்படத்தலாம்.
இந்த திட்டம் மூலம் கட்டணம் செலுத்தி பெறப்படும் அட்டைகள், ஃபாஸ்டேக் அட்டையுடன் இணைக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இத்திட்டம் மூலம், லட்சக்கணக்கானோர் பயனடைவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.