கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் பாஜக எம்.பியும், கர்நாடகவின் இளம் தலைவருமான தேஜஸ்வி சூர்யாவின் பெயர் இடம் பெறாதது  பல கேள்விகளை எழுப்புகிறது.


நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல்:


கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக  மே 10ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பரப்புரையில் களமிறங்கியுள்ளன. தேர்தல் பரப்புரை சூடு பிடிக்கத்தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.  அந்த பட்டியலில் பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, எடியூரப்பா, நலின் குமார் கடீல், பசவராஜ் பொம்மை, ப்ரஹலாத் ஜோஷி, சதானந்த கவுடா, ஈஸ்வரப்பா, கோவிந்த் கர்ஜோல், நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி ராணி, தர்மேந்திர பிரதான், மன்சுக் பாய் மண்டாவியா ஆகியோருடன் 18வது பெயராக தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அவரின் பெயரை அடுத்து உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் செளகான், அஸ்ஸாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வ சர்மா உள்ளிட்டோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.


தேஜஸ்வி சூர்யாவிற்கு வாய்ப்பில்லை:


நட்சத்திர பேச்சாளர்களுக்கான இந்த பட்டியலில் பாஜக எம்.பியும் கர்நாடகவின் இளம் தலைவருமான தேஜஸ்வி சூர்யாவின் பெயர் இடம் பெறாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 30 வயதான தேஜஸ்வி சூர்யா பாஜகவின் இளைஞர் பிரிவுத் தலைவராகவும், பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.  இருப்பினும், பாஜக புதன்கிழமை வெளியிட்ட 40 நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை. அண்மையில் அண்ணாமலையுடன் சேர்ந்து தேஜஸ்வி சூர்யா விமானத்தில் பயணித்த போது, விமானத்தின் அவசரகால கதவை திறந்தது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.  இதனால்,  தேர்தல் சமயத்தில் தேவையில்லாத பேச்சுக்களுக்கு இடம் தரக்கூடாது என்பதால் தான் பாஜக தலைமை அவரது பெயரை பிரசார தலைவர் பட்டியலில் சேர்க்கவில்லை என பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றது . அதேசமயம் அவர் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்துக்கொள்வார் எனவும் சொல்லப்படுகின்றது. இதேபோல கர்நாடகா எம்.பி.யும் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளரான பிரதாப் சிம்ஹா, மற்றும் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா உள்ளிட்டோரின் பெயரும் அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. 


அண்ணாமலையை விமர்சித்த காயத்ரி ரகுராம்:


இதுதொடர்பாக பாஜகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மற்றவர்களின் வெற்றியின் மீது பயணிப்பதற்கு எல்லாம் தனி திறமை வேண்டும். இதற்கு பெயர் தான் கூடவே இருந்து குறிபறிப்பவர். அண்ணாமலையால் நேர்ந்த ஒரு விமான பயண சம்பவத்தால் தேஜஸ்வி சூர்யா ஓரம்கட்டப்பட்டார். ” என குறிப்பிட்டுள்ளார்.  இதனிடையே, கர்நாடகாவில் அண்ணாமலைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷட்டர் வருத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.