இரண்டு குழந்தைகளின் தாயான அஞ்சு என்னும் இந்தியப் பெண், பாகிஸ்தானிய நண்பரான நஸ்ருல்லாவுடன் ஃபேஸ்புக்கில் நட்பாகிய நிலையில், அவரை திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தான் சென்றுள்ளார். தற்போது அஞ்சுவின் தந்தை அவரது மகள் என்றைக்கு வீட்டை விட்டு சென்றாரோ அன்றே இறந்துவிட்டதாக கருதுவதாகவும், "அவரை மீண்டும் அழைத்து வரச்சொல்லி இந்திய அரசிடம் முறையிடப்போவதில்லை, அங்கேயே அவரை சாக விடுங்கள்" என்றும் கூறியுள்ளார்.
அவள் அங்கேயே சாகட்டும்..
குவாலியரில் வசிக்கும் அஞ்சுவின் தந்தை கயா பிரசாத் தாமஸ், “அவர் மனதில் என்ன வைத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. வீட்டை விட்டு வெளியேறிய அந்தப் பெண் என்னளவில் இறந்துவிட்டதாகவே கருதுகிறேன். அவள் தன் குழந்தைகளைப் பற்றியோ கணவனைப் பற்றியோ நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவள் என்ன செய்கிறாள் என்பதைப் பற்றி எனக்கு துளி கூட அக்கறை இல்லை, அவளுக்கு எப்போது விசா கிடைத்தது என்பது கூட எனக்கு தெரியாது" என்று அவர் கூறினார்.
அஞ்சுவின் புதிய திருமணத்தைப் பற்றிக் கேட்டபோது கோபமடைந்த பிரசாத், “நான் என்ன அவர் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறேனா? அவர் மனதில் என்ன நடக்கிறது என்பது எனக்கு எப்படி தெரியும்? நான் என்ன ஜோசியக்காரனா? அவர் வீட்டை விட்டே வெளியேறிவிட்டார், திருமணத்திற்கு நான் என்ன எதிர்வினை ஆற்றுவது?" என்று கேட்டார்.
'குழந்தைகளின் வாழ்க்கை சீரழிந்தது'
அவர் மேலும் பேசுகையில், “இப்படி ஒரு முடிவு எடுக்க நினைத்து இருந்தால், முதலில் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு அவனிடம் சென்றிருக்க வேண்டும். இப்போது, அவரது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளின் வாழ்க்கையும் பாழாகிவிட்டது. இப்போது அவர்களின் வளர்ப்புக்கு யார் பொறுப்பு?" என்று கேட்கும் பிரசாத், அஞ்சுவிடம் பேச விரும்பவில்லை என்றும், அவளை திரும்பி வரும்படி வற்புறுத்த மாட்டேன் என்றும் உறுதியாகக் கூறினார்.
2-3 நாட்களில் திரும்பி வருவதாக அஞ்சு கூறியிருந்தார்
இரண்டு குழந்தைகளின் தாயான, ராஜஸ்தானின் அல்வாரில் வசிக்கும் அஞ்சு (வயது 34), சமூக ஊடகங்களில் நட்பான நஸ்ருல்லாவை (வயது 29) சந்திப்பதற்காக ஜூலை 21 அன்று பாகிஸ்தான் சென்றடைந்தார். இந்தச் செய்தி வெளியாகி வைரலாகிய நிலையில், தன் குடும்பத்தினர் சங்கடமான சூழலை அனுபவித்து வருவதை அறிந்த அஞ்சு, ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் தான் சட்டப்பூர்வமாக பாகிஸ்தானுக்கு வந்துள்ளதாகவும், இரண்டு மூன்று நாட்களுக்குள் வீட்டிற்கு திரும்பி வருவேன் என்றும் கூறியிருந்தார்.
ஃபாத்திமாவாக மாறிய அஞ்சு
ஆனால் நேற்று (செவ்வாயன்று) அவர் இஸ்லாமிய மாதத்திற்கு மாறினார் என்றும், ஒரு மாவட்ட அமர்வு நீதிபதியின் முன்னிலையில் உள்ளூர் நீதிமன்றத்தில் நஸ்ருல்லாவை மணந்தார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அஞ்சு தனது பெயரை தற்போது ஃபாத்திமா என மாற்றிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. கயா பிரசாத் பல ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தனது மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்” என்று கூறினார். மேலும் நஸ்ருல்லாவுடனான அவரது உறவு குறித்து எதுவும் தெரியாது என்றும் அவர் கூறினார்.