உலகெங்கும் பெரும்பாலான மக்கள் செல்லப்பிராணிகளை வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், இந்தியாவிலும் செல்லப்பிராணிகள் வளர்ப்பது மக்களிடம் உள்ள பழக்கங்களில் ஒன்றாகவே காணப்படுகிறது.


வண்டியில் கட்டப்பட்ட நாய்:


உலகில் பெரும்பாலான மக்களின் முதன்மையான செல்லப்பிராணியாக நாய் உள்ளது. நாயை செல்லப்பிராணியாக வளர்க்கும் பலரும் அதை தங்கள் வீட்டில் ஒரு செல்லப்பிராணியாகவே பார்க்கின்றனர். இந்த நிலையில், கர்நாடகாவில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


கர்நாடகாவில் அமைந்துள்ளது உடுப்பி மாவட்டம். இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள மல்லூர் – ஷிர்வா கிராமம் இடையே நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில், ஸ்கூட்டி ஒன்றை நடுத்தர வயது ஆண் ஒருவர் ஓட்டிச் சென்றார். அவர் தன்னுடைய செல்லப்பிராணியான நாயை சங்கிலியில் கட்டி, தனது வண்டியின் பின்னால் உள்ள பிடியில் கட்டிக் கொண்டு வாகனத்தை ஓட்டி வந்தார்.






தெருவில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட பரிதாபம்:


அவர் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க பின்னால் சங்கிலியில் கட்டப்பட்ட நாய், தரையில் தரதரவென இழுத்துச் செல்லப்படுகிறது. இதை கவனிக்காத அந்த வாகன ஓட்டி வண்டியை ஓட்டிச் செல்கிறார். ஆனால், நாய் தரையில் சிராய்த்துக் கொண்டே இழுத்துச் செல்லப்படுகிறது. இதை அந்த வாகன ஓட்டி வேண்டுமென்றெ சென்றாரா? அல்லது நாய் தரையில் இழுத்துச் செல்லப்படுவது தெரியாமலே வாகனத்தை ஓட்டினாரா? என்பது இதுவரை தெரியவில்லை.


இந்த சம்பவத்தை பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். நாய் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனத்தில் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை அடிப்படையாக வைத்து வாகன ஓட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டி மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த வாகன ஓட்டி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.