நிலையான இருப்பிடமோ வேலை வாய்ப்போ இல்லாத ஒரு வாழ்கையை ஏன் கொடுத்தாய் என்ற கோபத்தில் மேற்கு டெல்ஹிஸ் பஞ்சாபி பாக் நகரில் உள்ள ஒரு கோவிலுக்குள் கற்களை வீசிய 28 வயது நிரம்பிய இளைஞர் ஒருவரை டெல்லி காவல்துறை கைது செய்தது. 


கைது செய்யப்பட்ட நபரின் பெயர்  விக்கி மால் என அடையாளம் காணப்பட்டுள்ளது.   


சனிக்கிழமை காலை, கோயிலின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த சிவபெருமானின் சிலைகள் உடைந்திருப்பதைக் கண்ட வைஷ்ணோ மாதா மந்திரின் அர்ச்சகர் காவல்துறையிடம் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டார்.


​​சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்த போலீசார், அந்த பகுதிகளில் குப்பை பொறுக்கும் பணியை செய்து வந்த விக்கி மால் தான் சம்பவத்தின் பின்னணியில் இருப்பதைக் கண்டறிந்தனர். கொரோனா பொது முடக்கநிலை காரணமாக இவரின் வருவாய் மோசமாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிலையான இருப்பிடமோ வேலை வாய்ப்போ இல்லாத காரணத்தினால் இறைவனிடம் பகைமை கொண்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது.       


ஐபிசி பிரிவு 295 ஏ ( மதவழிபாட்டில் ஈடுபடுவோரின் உணர்ச்சிகளை சீற்றமுற்று எழச் செய்ய வேண்டும் என்ற தீய கருத்துடன் வேண்டுமென்றே பேச்சாலோ, எழுத்தாலோ, அல்லது ஜாடையாலோ அவர்கள் மதத்தை அல்லது மத உணர்வுகளை புண்படுத்துவதும் அல்லது புண்படுத்த முயற்சி செய்வது) மற்றும் 457 ( வீடு, கூடாரம்  திருடுவது) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.