Andra Pradesh Violence: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
போக்குவரத்து சேவை பாதிப்பு:
ஆந்திராவில் இருகட்சியின் தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சித்தூர் மாவட்டத்தில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சித்தூர் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்து, லாரி, கார் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் ஓடவில்லை. பொதுவாக, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து திருப்பதிக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் சித்தூர் மாவட்டத்தை கடந்துதான் செல்ல வேண்டும். சித்தூரில் பந்த் காரணமாக வேலூர், திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆந்திரா செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வேலூர் வழியாக திருப்பதிக்கு வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனம் சென்ற பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், திரளான மக்கள் திருப்பதி ரயில் நிலையத்தில் சொந்த ஊருக்கு செல்ல குவிந்துள்ளனர்.
நடந்தது என்ன?
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. இந்நிலையில், அரசின் நீர்ப்பாசனத் திட்ட பணிகளை பார்வையிடுவதற்காக தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திர பாபு நாயுடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணித்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த ஒய்.எஸ்.ஆர் கட்சியினர் 'சந்திரபாபு கோ பேக்' என்று முழக்கமிட்டு, சந்திரபாபு நாயுடுவின் கான்வாயை தடுத்து நின்ற முயன்றனர். அப்போது, இரண்டு கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பின்னர், ஒருவரை ஒருவர் கற்கள், செருப்பு, பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், கட்சி தொண்டர்கள் காவல்துறையினரின் வாகனங்களுக்கும் தீ வைத்து எரித்துள்ளனர். இரு கட்சிகளின் தொண்டர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசு, தடியடி மேற்கொண்டனர்.
50 பேர் கைது:
இந்த கலவரத்தால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இந்த கலவரம் மேலும் பரவாமல் தடுக்க அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கவலரம் தொடர்பாக முதற்கட்டமாக 50 பேரை போலீசாரை கைது செய்தனர். இந்த கலவரம் தொடர்பாக போலீசார் வீடியோக்களை ஆய்வு செய்து வருவதாகவும், இந்த ஆய்வின்படி 200 முதல் 300 வரை கைது செய்யப்படலாம் என்று பேலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க