ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருக்கும் போது கூட்டத்திலிருந்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பரப்புரை:
ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலும் மக்களவை தேர்தலும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இரு தேர்தல்களும் வரும் மே மாதம் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஆந்திர முதலமைச்சரும் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி தீவிர தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.
இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில், இன்று ( ஏப்ரல் 13 ) வாகனத்தில் பயணித்துக் கொண்டே , தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வந்தார்.
முதலமைச்சர் மீது தாக்குதல்:
அப்போது கூட்டத்தில் இருந்த சிலர், கற்கள் மூலம் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், முதலமைச்சர் நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டது.
மேலும், அவரது புருவத்தின் மேல் சிறிய கீரல்கள் இருப்பது போன்ற புகைப்படமும் வெளியானது. அதில் சிறிது ரத்த கசிவும் ஏற்பட்டுள்ளதும் தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை பாதுகாப்பு பிரிவினர் சூழ்ந்து கொண்டனர். பின்னர் தொண்டர்களுக்கு கை கூப்பி வணக்கம் செலுத்திவிட்டு பேருந்தினுள் சென்றார்.
இதையடுத்து மருத்துவர்கள் உடனடியாக முதலுதவி அளித்தனர். இதையடுத்து மீண்டும் தேர்தல் பயண யாத்திரையை தொடர்ந்தார் என கூறப்படுகிறது
இத்தாக்குதல் குறித்து அக்கட்சியினர் தெரிவிக்கையில், தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வந்தபோது, கூட்டத்தில் இருந்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது என தெரிவிக்கின்றனர். மேலும், அருகில் இருந்த ஒருவர் மீதும் கல் விழுந்ததாக கூறப்படுகிறது.
காவல்துறை தீவிர விசாரணை
யார் இந்த தாக்குதல் நடத்தியவர்கள் குறித்தான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
மாநிலத்தின் முதலமைச்சருக்கு, இந்த தாக்குதல் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விஜயவாடா பகுதிகளில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தேர்தல் பரப்புரையின் போது கல்வீச்சு நடந்ததாக கூறப்படும் காட்சியை பி.டி.ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ளது.
இந்த காட்சியில், பாதுகாப்பு அதிகாரிகள் சூழ்ந்து கொண்டு இருப்பதை காண முடிகிறது. பின்னர் தொண்டர்களுக்கு கை கூப்பி வணக்கம் செலுத்திவிட்டு பேருந்தினுள் செல்லும் காட்சியை பார்க்க முடிகிறது.