நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 5 நாள்களே உள்ளன. வரும் 19ஆம் தேதியுடன் தொடங்கும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் மோடி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.


கேமர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு:


பிரச்சாரத்தை தாண்டி பல உத்திகளை கையாண்டு வருகிறார். குறிப்பாக, புதிய வாக்காளர்களை கவரும் விதமாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், முன்னணி ஆன்லைன் கேமர்களை (ஆன்லைன் கேம் விளையாடுபவர்கள்) பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.


இந்தியாவில் வளர்ந்து வரும் கேமிங் துறை, அதில் இருக்கும் வேலை வாய்ப்புகள், அதில் பெண்களின் பங்கேற்பு உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி உரையாடினார். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் ஒருவரை 'noob' என குறிப்பிட்டார். (Noob என்றால் கேமிங் துறையில் புதியவர்/அனுபவம் இல்லாதவர் என அர்த்தம்)


கேமர்களுடனான உரையாடலை ​​பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வீடியோவாக பகிர்ந்தார். அதில், 'grind' மற்றும் 'noob' போன்ற வார்த்தைகளை கேமர்கள் பயன்படுத்தினர். அப்போது, "noob" என்ற வார்த்தையைக் கேட்டவுடன் பிரதமர் மோட் வாய்விட்டு சிரித்துவிட்டார்.


மோடி பயன்படுத்திய வார்த்தையால் சர்ச்சை:


பின்னர், எதிர்க்கட்சி தலைவர் ஒருவரை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்த பிரதமர் மோடி, "தேர்தலின் போது இந்த வார்த்தையை நான் பயன்படுத்தினால், நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று மக்கள் ஆச்சரியப்படுவார்கள். நான் அதைச் சொன்னால், நீங்கள் அதை ஒரு குறிப்பிட்ட நபர் என கருதுவீர்கள்" என்றார்.


யார் என குறிப்பிடவில்லை என்றாலும் அந்த வார்த்தையை பயன்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி அளித்த பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, "பிரதமர் நரேந்திர மோடி யாரையும் குறிப்பிடவில்லை. ஆனால் அரசியலில் 'noob' யார் என்று காங்கிரஸ் தலைவர்கள் எதிர்வினையாற்றி உறுதிப்படுத்துகிறார்கள்?" என விமர்சித்துள்ளார்.


 






தீர்த்த மேத்தா, அனிமேஷ் அகர்வால், அன்ஷு பிஷ்ட், நமன் மாத்தூர், மிதிலேஷ் படன்கர், கணேஷ் கங்காதர்,  பாயல் தாரே உள்ளிட்ட முன்னணி கேமர்கள், பிரதமர் மோடியுடன்  உரையாடினர்.


இதையும் படிக்க: BJP Manifesto: நாளை வெளியாகிறது பாஜக தேர்தல் அறிக்கை.. பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்!