ஆந்திராவில்  ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்  எம்.எல்.ஏ கோட்டம் ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி சாக்கடையில் இறங்கி  நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.


வடிகால் பிரச்சினை:


நெல்லூர் ஊரக சட்டப்பேரவைத் தொகுதியின் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ, கோட்டம்ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி, அப்பகுதியில் உள்ள உம்மாரெட்டிகுண்டாவின் சாக்கடையில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உம்மாரெட்டிகுண்டா பகுதியில்  கடந்த 10 ஆண்டுகளாக சாக்கடை நீர் வடிகால் பிரச்சினை இருந்திருக்கிறது.  


ரயில்வே தண்டவாளத்திற்கு அருகிலேயே இந்த வாய்க்கால் அமைந்துள்ளதால், வடிகாலில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அப்பகுதி எம்.எல்.ஏ  கோட்டம்ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி  அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆத்திரமடைந்து அதனை கண்டித்து, சாக்கடையில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.







அதிகாரிகள் உறுதி :


அவர் கட்சித் தலைவர்களுடன் செவ்வாய்க்கிழமை காலை நெல்லூர் ஊரகப் பகுதிகளை பார்வையிட்டார். அப்போது துற்நாற்றம் வீசும் சாக்கடை பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருப்பதை அறிந்து சற்றும் தயங்காமல் சாக்கடையில் இறங்கி அதிகாரிகளின் அலட்சிய போக்கிற்கு கண்டம் தெரிவித்தார். மேலும் அதிகாரிகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விருப்பம் தெரிவிக்கும் வரை சாக்கடையில் இருந்து வெளியேற மாட்டேன் என தீர்க்கமாக இருந்துள்ளார்.


எம்.எல்.ஏ., போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும், ரயில்வே மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், அப்பகுதிக்கு விரைந்து வந்து, எம்.எல்.ஏ.,விடம் பேசி, பத்து நாட்களுக்குள் தீர்வு காண்பதாக உறுதியளித்தனர்.அவர்கள் எம்.எல்.ஏ ஸ்ரீதர் ரெட்டியிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்ததை அடுத்து , போராட்டத்தை எம்.எல்.ஏ வாபஸ் பெற்றார்.


இது குறித்து பேசிய  ஸ்ரீதர் ரெட்டி “அப்பகுதி மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தனக்கு உள்ளது என்றும் அதிகாரிகள் பிரச்சினைக்கு 10 நாட்களில் தீர்வு காணாவிட்டால் மீண்டும் சாக்கடையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளார்.






 


கடந்த 2018 ஆம் ஆண்டு YSRCP எதிர்க்கட்சியாக இருந்தபோது இதேபோன்ற போராட்டத்தை இவர் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.