திருப்பதி விமான நிலையப் பணியாளர் குடியிருப்பில் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ரேனிகுண்டா விமான நிலைய மேலாளர் சுனிலுக்கும், அபிநய ரெட்டிக்கும் மோதல் ஏற்பட்ட பிறகு இவ்வாறு நடைபெற்றுள்ளது. அபிநய ரெட்டி ஆந்திரப் பிரதேசத்தின் எம்.எல்.ஏ கருணாகர ரெட்டியின் மகன் ஆவார்.
விமான நிலையத்திற்குள் அபிநய ரெட்டி அனுமதிக்கப்படவில்லை என்பதால் விமான நிலையப் பணியாளர்கள் குடியிருப்பில் அபிநய ரெட்டி தண்ணீர் இணைப்பைத் துண்டித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து விமான நிலையப் பணியாளர்கள் தரப்பில் எந்தக் கருத்தும் வெளியாகவில்லை.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிநய ரெட்டி, கருணாகர ரெட்டி ஆகியோர் அப்பகுதியில் செல்வாக்கு கொண்டவர்களாகக் கருதப்படுகின்றனர். மேலும், திருப்பதியில் உள்ள ரேனிகுண்டா விமான நிலையம் இந்திய விமானக் கட்டுப்பாட்டு ஆணையத்தால் இயக்கப்படும் சர்வதேச விமான நிலையம் ஆகும்.
ஆந்திரப் பிரதேச அமைச்சர் போட்சா சத்யநாராயணாவை வரவேற்க விமான நிலையத்திற்குச் சென்ற அபிநய ரெட்டியை விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்காததால் அங்கு வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.
சிறிது நேரத்திற்குப் பிறகு, ரேனிகுண்டா விமான நிலையத்திற்கும், விமான நிலையப் பணியாளர்களின் குடியிருப்புக்கும் வழங்கப்படும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இது அபிநய ரெட்டியின் பழிவாங்கல் நடவடிக்கை எனக் கூறப்படுகிறது. எனினும், நகராட்சி அலுவலகம் தரப்பில் குழாய்கள் அடைப்பு காரணமாகவே தண்ணீர் துண்டிக்கப்பட்டதாக விளக்கம் கூறப்பட்டுள்ளது.
மேலும், விமான நிலையப் பணியாளர்களின் குடியிருப்பு பகுதியில் வாழும் மக்கள் வடிகால் பிரச்னைகளையும் முன்வைத்துள்ளனர். இந்த வடிகால் காரணமாக குடிநீர் குழாய் பாதிக்கப்படுவதாக நகராட்சி அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது.
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ரேனிகுண்டா விமான நிலைய அதிகாரிகள் பல்வேறு அதிகாரப்பூர்வ வழிமுறைகளைப் பின்பற்றவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து திருப்பதி நகராட்சி அதிகாரிகளும், விமான நிலைய அதிகாரிகளும் கருத்து கூற மறுத்துள்ளனர்.
ஆந்திராவின் பாஜக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.வி.நரசிம்ம ராவ் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்நாட்டு விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவிடம் ட்விட்டரில் முறையிட்டுள்ளார். அதற்கு அவர், `இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு, தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், பயணிகளுக்கும், விமான நிலையப் பணியாளர்களுக்கும் எந்த தொந்தரவும் நிகழாமல் பார்த்துக் கொள்ளப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.