ஆந்திராவில் புயலை கிளப்பிய சந்திரபாபு நாயுடுவின் கைது:


கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, ஆந்திர பிரதேச முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறையின் நிதியை தவறுதலாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக சந்திரபாபு நாயுடு மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை அம்மாநிலத்தின் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் (சிஐடி) கடந்த 9ஆம் தேதி கைது செய்தனர்.


இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் புதிய புயலை கிளப்பியது. இச்சூழலில், தனக்கு எதிராக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு வழக்கு தொடர்ந்தார். சந்திரபாபு நாயுடுவின் மனுவை அம்மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் அவரின் காவலை மேலும் 2 நாள்களுக்கு நீட்டித்தது.


உச்ச நீதிமன்றத்தை நாடிய சந்திரபாபு நாயுடு:


இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து,  தனக்கு எதிராக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.  இதற்கிடையே, ராஜமகேந்திராவரம் மத்திய சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவிடம் ஆந்திர போலீசார் இன்று விசாரணையை தொடங்கினர்.


ஆரம்பத்தில், இந்த ஊழல் வழக்கின் 37ஆவது குற்றவாளியாக சந்திரபாபு நாயுடு சேர்க்கப்பட்டார். ஆனால், தற்போது முக்கிய குற்றவாளியாக மாநில குற்றப் புலனாய்வுத் துறை சேர்த்துள்ளது.


சந்திரபாபு நாயுடுவை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக குடியரசு தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 1988 ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்திரபாபு  நாயுடு மீது ஏசிபி 120(பி), 166, 167, 418, 420, 465, 468, 201, 109, 34 மற்றும் 37 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதில் இருந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் தெலங்கு தேச கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுடன் ஆந்திர பிரதசத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. மாநில தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் கூட இல்லாத நிலையில், சந்திரபாபு நாயுடுவின் கைது தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆந்திராவில் தற்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

இதையும் படிக்க: India-Canada row: ”இந்தியா யானை, கனடா வெறும் எறும்பு” - எச்சரிக்கும் அமெரிக்காவின் பென்டகனின் முன்னாள் அதிகாரி