நாட்டின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று ஆந்திரா. மக்களவைத் தேர்தலுடன் அந்த மாநில சட்டமன்றத்திற்கும் அங்கு தேர்தல் நடைபெற்றது. மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டு தேர்தல்களிலும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.


பாப்லோ எஸ்கோபருடன் ஜெகன்மோகனை ஒப்பிட்ட சந்திரபாபு:


சந்திரபாபு நாயுடு மீண்டும் அந்த மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். பவன் கல்யாண் அந்த மாநில துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்த நிலையில், ஆந்திர முதலமைச்சர சந்திரபாபு நாயுடு அந்த மாநில சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை உலகின் போதைப்பொருள் கும்பல் டானாக திகழ்ந்த பாப்லோ எஸ்கோபருடன் ஒப்பிட்டு பேசினார்.


அவர் தனது உரையில், “ ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் ஆந்திரா கஞ்சா தலைநகரமாக இருந்தது. கொலம்பியாவின் மிகப்பெரிய போதைப்பொருள் டானாக திகழ்ந்தவர் பாப்லோ எஸ்கோபர். அவர் ஒரு போதைப்பொருள் தீவிரவாதி. பின்னர், அவர் அரசியல்வாதியாக மாறினார். அவர் போதைப்பொருட்கள் விற்பனை செய்தே 30 பில்லியன் டாலர் அப்போதே சம்பாதித்திருந்தார். அவர் 1976 மற்றும் 1980ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.


பணக்காரர் ஆக விருப்பம்:


அவர்தான் உலகின் மிகப்பெரிய பணக்கார போதைப்பொருள் தலைவர் ஆவார். போதைப்பொருள் விற்பனை செய்து ஒருவரால் பணக்காரர் ஆக முடிகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் நோக்கம் என்ன? டாடா, ரிலையன்ஸ், அம்பானியிடம் பணம் உள்ளது. அவர்களை விட இவர் பணக்காரர் ஆக விரும்புகிறார். சிலருக்கு தேவைகள் உள்ளது. சிலருக்கு பேராசை உள்ளது. சிலருக்கு வெறி உள்ளது. சில வெறிபிடித்தவர்கள் இதுபோன்ற விஷயங்களைச் செய்கிறார்கள்.


சந்திரபாபு நாயுடுவின் இந்த பேச்சுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆந்திராவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின்போதே பல இடங்களில் கடும் மோதல்களும், கலவரங்களும் வெடித்தது. சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்ற பிறகு ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான கல்லூரியின் பெயர்பலகை இடிக்கப்பட்டது என்பதும். ஜெகன்மோகன் ஆட்சியில் இருந்தபோது சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


ஆந்திராவில் தெலுங்கு தேசமும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் எதிரெதிராக இருந்தாலும், இந்த இரு கட்சிகளிலும் மத்தியில் பா.ஜ.க.வுடனே கூட்டணியில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.