ஆம்புலன்சில் செல்ல பணம் இல்லாததால், தனது மகனின் உடலை பைக்கில் கொண்டு சென்றுள்ளார் ஒரு ஏழை தந்தை. இந்த சம்பவம் திருப்பதி அருகே நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் உள்ள பெனாகுலூரைச் சேர்ந்த10 வயது ஜெசவா கல்லீரல் கோளாறால் சிகிச்சையின் போது இறந்தார். திருப்பதியில் இருந்து 100 கி.மீ தொலைவில் பெனாகுலூர் உள்ளது.


பெனாகுலூர் கோண்டூர் எஸ்டி காலனியைச் சேர்ந்த பழத்தோட்டத் தொழிலாளி நரசிம்முலுவின் மகன் ஜெசவா கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பதியில் உள்ள ரூயா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் உயிரிழந்தார். மருத்துவமனை செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் அவரது தந்தையிடம் உடலை ஒப்படைத்தது.


நரசிம்முலு மகனின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அரசின் அமரர் ஊர்தி சேவைக்கு காத்திருந்தார். ஆனால் அது வரவில்லை. இதனால், அவர் ஒரு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அணுகினார். அவர் 100 கிமீ பயணத்திற்கு 20,000 ரூபாய் கேட்டார்.


மாதம் ரூ.4,000 சம்பாதிக்கும் நரசிம்முலுவின் வேண்டுகோளுக்கு ஓட்டுநர் செவிசாய்க்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த நரசிம்முலு  தனது பழத்தோட்ட உரிமையாளர் ஸ்ரீகாந்த் யாதவை அழைத்தார். அவர் தனது நண்பர் கிஷோர் மூலம் ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்தார்.


கிஷோரின் ஆம்புலன்ஸ் உடலை எடுக்க சென்றபோது, ​​தனியார் ஓட்டுநர்கள்  விரட்டிச் சென்று நரசிம்முலுவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.


கிஷோரின் டிரைவர் உடலை மாற்ற இரு சக்கர வாகனத்தை ஏற்பாடு செய்தார்.  நரசிம்முலு தனது மகனின் உடலைக் கைகளில் ஏந்திக்கொண்டு பைக்கில் புறநகர்ப் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்து கிஷோரின் ஆம்புலன்ஸில் ஏறினார்.


இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் தொலைபேசியில் பேசிய ஸ்ரீகாந்த் யாதவ், நரசிம்முலுவுக்கு  ஒரு ஏக்கர் மாம்பழத்தோட்டம் உள்ளது. அதில் வரும் வருமானத்தால் அவரது நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு உணவளிக்க போதுமானதாக இல்லை. நரசிம்முலு தனது பழத்தோட்டத்தில் வேலை செய்து பணம் சம்பாதித்து வந்தார்.


அரசாங்கத்தால் நடத்தப்படும் மகாபிரஸ்தானம் கார் சேவை(அமரர் ஊர்தி) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கிடைக்கும் என்று நரசிம்முலுவிடம் கூறப்பட்டதாக அவர் கூறினார்.


இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த கிஷோர், “குறைந்த கட்டணத்தில் சேவைகளை வழங்கும் பல ஆம்புலன்ஸ்கள் உள்ளன. ஆனால், ரூயா மருத்துவமனை நிர்வாகம் யாரையும் மருத்துவமனைக்குள் அனுமதிப்பதில்லை” என்று கூறினார்.


இந்த சம்பவத்திற்கு முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆளும் அரசை கடுமையாக விமர்சித்தார். சிறுவனின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை கூறினார்.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண