ஆந்திரா: பிரகாசம் மாவட்டம் கம்பம் அருகே சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 5 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த 40 பேருக்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பியபோது 30 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து பொதிலியில் இருந்து காக்கிநாடா நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. விபத்தின் போது பேருந்தில் 35 முதல் 40 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக காக்கிநாடா செல்ல RTC பேருந்தை இரு வீட்டாரும் வாடகைக்கு எடுத்துள்ளனர்.  பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்கம் கலக்கத்தினால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பொதிலியைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் (65), அப்துல் ஹனி (60), ஷேக் ரமீஸ் (48), முல்லா நூர்ஜஹான் (58), முல்லா ஜானி பேகம் (65), ஷேக் ஷபீனா (35), மற்றும் ஷேக் ஹீனா (6) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான முழு விவரம் இன்னும் தெரியவரவில்லை.