Viral Video: போலீசாரின் கண்முன்பே பொதுமக்கள் மதுபாட்டில்களை திருடியது தொடர்பான, வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
வைரல் வீடியோ..!
காவல்துறையினர் ஓய்...ஓய்...ஓய்.. என கூச்சலிடுவதை சற்றும் காதில் வாங்காம, தேனீக்களை போன்று மொய்த்து, அழிப்பதற்கு தரையில் வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை பொதுமக்கள் எடுத்துக்கொண்டு ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பான வீடியோவில் ஒருவர், காவலரிடம் நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஒரே ஒரு பீர் பாட்டிடை எடுத்துச் சென்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
நடந்தது என்ன?
ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் இருந்து கிட்டத்தட்ட 40 கிமீ தொலைவில் உள்ள குண்டூரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை குப்பை கொட்டும் இடத்தில் வைத்து அழிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு ஏராளமான குடிமகன்கள் குவிந்தனர்.
திருட தொடங்கிய கும்பல்:
மதுபாட்டில்களை நாலாபுறமும் சூழ்ந்து நின்ற குடிமகன்கள், சடசடவென குனிந்து தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட தொடங்கினர். என்ன நடக்கிறது என்பதை போலீசார் உணர்வதற்குள்ளாகவே பலர் பாட்டில்களுடன் தப்பினர். அததொடர்ந்து, குடிமகன்களை தடுக்க முயன்றும் போலிசாருக்கு தோல்வியே கிட்டியது. சார் ஒரே ஒரு பாட்டில் தான் சார் என, கெஞ்சி எல்லாம் தங்களுக்கான மதுபாட்டில்களை சிலர் எடுத்துச் சென்றனர்.
காவலரிடம் கெஞ்சிய குடிமகன்:
கிடைத்தவரை லாபம் என குடிமகன்கள் பாட்டிலுடன் தப்பிச் செல்ல, ஒரு நபர் மட்டும் மதுபாட்டில்களுக்கு மத்தியில் சென்று தனக்கு பிடித்த மதுபானத்தை எடுத்துள்ளார். அவரை கவனித்து பிடித்த காவலர், மதுபாட்டிலை வாங்க முயற்சித்தார். ஆனார், அந்த நபரோ சார் சார் ஒன்னே ஒன்னு சார் என்பது போல, விடாப்பிடியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சில விநாடிகள் இதே நிலை நீடிக்க, அருகே இருந்த உயரதிகாரி சரி போ என்பது போல சைகை செய்தார். இதையடுத்து அந்த நபர் தான் எடுத்த மதுபாட்டிலுடன் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து மீதமிருந்த மதுபாட்டில்களை, பொக்லைன் இயந்திரம் கொண்டு போலீசார் அழித்தனர்.