இந்தியாவின் முன்னணி பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. எண்ணெய், எரிவாயு தொடங்கி பெட்ரோ கெமிக்கல்ஸ், தொலைத்தொடர்பு, சில்லறை விற்பனை, நிதி சேவை நிறுவனங்கள் வரை அவர் தொடாத துறையே இல்லை. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பல்வேறு துறைகளில் கலக்கி வருகிறது.


எதிர்பார்ப்பை எகிற வைத்த அம்பானி வீட்டு கல்யாணம்:


முகேஷ் அம்பானிக்கு ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி என இரண்டு மகன்களும் இஷா அம்பானி என்ற மகளும் உள்ளனர். இஷா அம்பானிக்கு கடந்த 2018ஆம் ஆண்டும் ஆகாஷ் அம்பானிக்கு கடந்த 2019ஆம் ஆண்டும் திருமணம் நடந்தது. அந்த வரிசையில், முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு வரும் ஜூலை மாதம், மும்பையில் திருமணம் நடக்க உள்ளது.


என்கோர் ஹெல்த்கேர் (Encore Healthcare) மருந்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வைரன் மெர்ச்சன்டின் இளைய மகளான ராதிகா மெர்ச்சன்டை ஆனந்த் அம்பானி திருமணம் செய்து கொள்ள உள்ளார். திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களை வெகு விமரிசையாக நடத்த அம்பானி குடும்பம் திட்டமிட்டு வருகிறது.


அந்த வகையில், அம்பானியின் வீட்டில் இசை, நடனம் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளை பாரம்பரிய சுவையுடன் நடத்தப்பட உள்ளது. வரும் மார்ச் 1ஆம் தேதி தொடங்கும் கொண்டாட்டங்கள் மார்ச் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


புதிய கோயில்களை கட்டும் அம்பானி:


இந்த நிலையில், திருமணத்திற்கு முன்பு குஜராத்தின் ஜாம்நகரில் கோயில்களை கட்டும் பணியில் அம்பானி குடும்பம் இறங்கியுள்ளது. ஜாம்நகரில் உள்ள ஒரு வளாகத்தில் புதிய கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நுணுக்கமாக செதுக்கப்பட்ட தூண்கள், ஃப்ரெஸ்கோ பாணி ஓவியங்கள், பல்வேறு தெய்வங்களின் சிற்பங்கள், கட்டிடக்கலை ஆகியவை வடிவமைக்கப்பட்டு வருகிறது.


இந்தியாவின் கலாசார, ஆன்மீக அடையாளத்தை கோயிலில் பிரதிபலிக்கும் வகையில் பழமை வாய்ந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பழங்கால மரபுகளை பின்பற்றி, கோயில் வளாகத்தை பிரம்மாண்டமாக கட்டி வருகின்றனர் நாட்டின் தலைசிறந்த சிற்ப கலைஞர்கள்.


திருமண ஏற்பாட்டு பணிக்கு மத்தியிலும் ஜாம்நகரில் மோதிவாடி கோயிலின் கட்டுமான பணிகளை அம்பானி குடும்பத்தினர் மேற்பார்வையிட்டு வருகின்றனர். இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனரும் தலைவருமான நீதா அம்பானி, கிராம மக்கள் மற்றும் கைவினைஞர்களுடன் பேசுவதை காணலாம்.


 






ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டத்தில் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிற துறையைச் சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.