தனது சுவாராசியமான பல ட்வீட்களுக்காக பெயர் போனவர் மஹிந்த்ரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்த்ரா. 


சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக உள்ள ஆனந்த் மஹிந்த்ரா முன்னதாக தனது மஹிந்திரா குழும பிராண்ட் மாடலான பொலிரோ ஜீப்பை காட்டில் தனியாக சுற்றும் யானை ஆக்ரோஷமாகத் துரத்தும் திக் திக் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் விடாமல் துரத்தி வரும் யானையிடமிருந்து தப்பித்து ஓட்டுநர் ரிவர்சில் வாகனத்தை வெகுதூரம் இயக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இறுதியாக யானை துரத்துவதை விட்டு தன் வழியே செல்லும் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா, ஓட்டுநரை கேப்டன் கூல் எனப் புகழ்ந்துள்ளார்.


”மேலும் உலகின் சிறந்த பொலீரோ டிரைவராக இவரை அறிவிக்கிறேன்” எனவும் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ கர்நாடகா மாநிலம், கபினி காப்பகத்தில் சில வாரங்களுக்கு முன் எடுக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






ஆனந்த் மஹிந்த்ராவின் இந்த வீடியோ வழக்கம் போல் அதிக லைக்குகளைப் பெற்று ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.


முன்னதாக தமிழில் தான் கற்றுக்கொண்ட வார்த்தை பற்றி ஆனந்த் மஹிந்த்ரா பதிவிட்ட ட்வீட் வைரலானது.
”நான் பள்ளிக்கூடம் படித்ததெல்லாம் தமிழ்நாட்டில்தான். அதனால் இந்த ஒரு சொல்லைதான் நான் முதலில் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு அடிக்கடி இந்த சொல்லை பயன்படுத்தியிருக்கிறேன். சில சமயம் உரக்கவும் சொல்லியிருக்கிறேன். சிலசமயம் மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டிருக்கிறேன்’ என ட்வீட் செய்திருந்தார்.






ஆங்கிலத்தில் நாம் சொல்ல வரும் பல வார்த்தையை தமிழில் மிக சிறப்பாக ஒரே வார்த்தையில் சொல்லிவிட முடியும் என்பதைக் குறிப்பிட்டிருந்த அவர், ஆங்கிலத்தில் ‘உங்களது விளக்கத்தைக் கேட்கவோ அல்லது உங்கள் கருத்தை அறியவோ எனக்கு நேரமில்லை. அதனால் என்னை சற்று தனியே விடுங்கள்’ எனச் சொல்வதை தமிழில் ‘போடா டேய்!’ என முடித்துக் கொள்ளலாம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.







மேலும் கூடுதலாக தமிழில் நிறையவே கெட்ட வார்த்தைகளைக் கற்றுக்கொண்டதாகவும், அது தனக்கு கார் ஓட்டும்போது குறிப்பாக தனது மஹிந்த்ரா தார் வண்டிக்கு குறுக்கே யாரேனும் சென்றால் திட்டுவதற்கு வசதியாக இருப்பதாகவும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.