உத்தர பிரதேசத்தில் ஆணுடன் காதல் உறவில் இருந்ததற்காக 20 வயது பெண்ணை அவரது தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை உறுதி செய்த காவல்துறை, ஜின்ஜானா பகுதிக்கு உள்பட்ட ஷியாம்லி ஷியாம்லா வல்லேஜில் செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்தது.






இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் குமார் அபிஷேக் கூறுகையில், "இது தொடர்பாக ஹிமானி (20) என்ற பெண்ணின் தந்தை பிரமோத் குமார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தனது மகள் தனது குடும்பத்தின் பெயரைக் கெடுத்துவிட்டதாக கருதி தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.


ஹிமானி தனது காதலன் அஜய் காஷ்யப்புடன் (22) தப்பிச் சென்று சில நாட்களுக்குப் பிறகு தனது வீட்டுக்குத் திரும்பினார். பிரமோத் தனது மகளை காதல் உறவுக்கு எதிராக சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அந்த பெண் பிடிவாதமாக இருந்திருக்கிறார்" என்றார்.


எலும்புக்கூடுகளை மீட்ட போலீசார் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சமீபத்தில், உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் ஆதிக்க சாதிப் பெண்ணைத் திருமணம் செய்ததற்காக பட்டியலின இளைஞர் ஒருவர் மனைவியின் உறவினர்களால் கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.






சாதிய ஆணவ படுகொலைகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வந்தபாடில்லை. சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளையும் அரசும், சமூகமும் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த வந்த போதிலும், காவல்துறை மெத்தனமான நடந்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


இதற்கென தனி சட்டம் இயற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில், இளவரசன், கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்குகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. முற்போக்கு மாநிலம் எனக் கூறப்படும் தமிழ்நாட்டிலேயே இதுபோன்ற கொலைகள் நடைபெறுவது பிரச்சினையின் தீவிரத்தன்மையை நமக்கு உணர்த்துகிறது.