இந்திய சுதந்திர தினம் இன்று (ஆக.15) நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுள்ளது. 75ஆவது சுதந்திர தின நிறைவை ஒட்டி கடந்த ஓராண்டாகவே சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா என்ற பெயரில் பல நிகழ்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டன.
ஹர் கர் திரங்கா:
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி சுதந்திர தின பவள விழாவைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 'ஹர் கர் திரங்கா' (வீடுகள் மீது தேசிய கொடி ஏற்றுதல்) இயக்கம் மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி முன்னதாக அறிவித்தார்.
இதையொட்டி இந்த மூன்று நாட்களிலும் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் மீது தேசியக்கொடி ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனை ஏற்று நாட்டு மக்களும் ஆர்வத்தோடு தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர். தேசியக்கொடி ஏற்றிய புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றி சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனந்த் மஹிந்திரா ட்வீட்:
இந்நிலையில், வித்தியாசமான விஷயங்களை ஷேர் செய்வதில் பெயர் போனவரான தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா இன்று சுதந்திர தின ஸ்பெஷலாக பகிர்ந்துள்ள ட்வீட் கவனத்தை ஈர்த்துள்ளது.
வீட்டில் தேசியக் கொடியேற்றும் ஒரு வயதான தம்பதியின் புகைப்படம் அவரது ட்வீட்டில் இடம்பெற்றுள்ளது. ஒரு மூதாட்டி இரும்பு டின் மீது ஏறி தேசியக் கொடியை ஏற்றுகிறார். அந்த டின்னை அவரது கணவர் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார். மூதாட்டி இரும்பு டின் மீது ஏற பயன்படுத்திய பச்சை நிற ஸ்டூல் அவர் அருகேயே இருக்கிறது.
இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, ”இந்திய சுதந்திர தினத்தை எதற்கு இப்படி கொண்டாடுகிறார்கள் என்ற கேள்வி உங்கள் மனதில் இருந்தால் இந்த முதியவர்களிடம் கேளுங்கள், அவர்கள் இருவரும் வேறு எவரையும் காட்டிலும் சிறப்பாக விவரிப்பார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
அஸ்ஸாம் முதல்வர் பகிர்ந்த ட்வீட்:
இதே போல் அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா இன்று ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் பொங்கைங்கன் மாவட்டத்தைச் சேர்ந்த 82 வயதான கிரிஷ் பர்மன், அவரது மனைவி அனுபிரியா பர்மன் தேசியக் கொடியுடன் நடந்து செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் அந்த வயதான தம்பதியனரின் தேசப்பற்றை போற்றிப் பாராட்டியுள்ளார் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா.