என்.வி.ரமணாவிற்கு பிறகு இந்திய தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள உதய் உமேஷ் லலித், தனது பதவிக்காலத்தில் கிடைக்கும் வளங்களை வைத்து அதிக தீர்வுகளை பெற நிர்வாக ரீதியாக கவனம் செலுத்துவேன் என தெரிவித்துள்ளார்.


பிற வழக்குகளில் ஒரே மாதிரியான விவகாரங்கள் அடங்கி இருந்தால் அது தொடர்பான மனுக்களை ஒன்று சேர்த்து விசாரிப்பதன் மூலமாக இதை சாத்தியப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


இதன் மூலம் கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள பல வழக்குகளை முடித்து வைக்கலாம் என யோசனை கூறியுள்ளார். எடுத்துக்காட்டுடன் பேசிய அவர், "உச்ச நீதிமன்றத்திற்கு வருமான வரி தொடர்பான விஷயங்கள் பரிசீலினைக்கு வரலாம்.


இது போன்ற வழக்குகள் அடிக்கடி வருபவை. இந்த விஷயத்தை எவ்வளவு சீக்கிரம் தீர்த்துவிடுகிறீர்களோ, அவ்வளவு நல்லது. ஏனென்றால் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும் அப்போது தீர்க்கப்படும்.


உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது முக்கிய பணி சட்டத்தை வகுப்பது. அரசியலமைப்பை விளக்குவது. எனவே, இதுபோன்ற சந்தர்ப்பங்கள் வரும்போது, ​​முடிந்தவரை விரைவாகப் பட்டியலிடப்பட்டு, சரியான (பெஞ்ச்) அமர்வுக்கு அனுப்பினால் அதிக அளவில் முடிவுகள் கிடைப்பதை பார்க்கலாம். அதுதான் தலைமை நீதிபதியின் பணி" என்றார்.


வழக்குகளை எந்த நீதிபதிக்கு அனுப்பலாம் என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் படைத்தவர் தலைமை நீதிபதியாக உள்ளார். இது தொடர்பாக பேசிய உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி லலித், "வழக்கு யாருக்கு செல்ல வேண்டும் என்பதை தலைமை நீதிபதி நிர்ணயிப்பது பற்றி பரந்த விதிகள் இருக்கும் போது, ​​தனி வழக்குகளை ஒதுக்கும்போது புறநிலை சார்ந்து முடிவு எடுக்கலாம்.


அமர்வுகளை நிர்ணயிப்பது, அரசியலமைப்பு அமர்வுகளை அமைப்பது மற்றும் அவற்றின் முன் தொடர்புடைய விஷயங்களை பட்டியலிடுவது ஆகியவற்றில் தலைமை நீதிபதி கவனம் செலுத்தலாம்” என்றார். 


நீதிபதி ரமணா ஆகஸ்ட் 27 அன்று ஓய்வு பெறும் நிலையில், அடுத்த தலைமை நீதிபதி லலித், 74 நாட்கள் பதவியில் இருப்பார். முந்தைய நேர்காணல்களில், அவர் நீதிமன்றத்தில் ஆரோக்கியமான நடைமுறைகளைச் செய்ய விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார். அனைவரையும் அரவணைத்து செல்வது குறித்து பேசியிருந்தார்.


நிலுவையில் உள்ள வழக்குகளை கருத்தில் கொண்டு பார்க்கையில் நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கு ஆதரவான நிலைபாட்டை லலித் எடுக்கவில்லை. பணிச்சுமை அவர்களின் உடல்நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண