ஒடிசாவில் 70 வயது மூதாட்டி ஒருவர் வங்கியில் இருந்து ஓய்வூதியம் பெறுவதற்காக வெறுங்காலுடன், ஒரு நாற்காலியை தாங்கி தாங்கி நடந்து பல கிலோமீட்டர்கள் செல்வதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.
வெறுங்காலுடன் நடந்து செல்லும் மூதாட்டி
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், உடைந்த நாற்காலியின் சப்போர்ட்டில், அதனை தூக்கி தூக்கி முன்னால் வைத்து, கடுமையான வெப்பத்தில் வெறுங்காலுடன் நடந்து செல்வதை காண முடிகிறது. இச்சம்பவம் ஒடிசாவின் நப்ராங்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாரிகான் பகுதியில் ஏப்ரல் 17 அன்று நடந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. வீடியோவில் காணப்படும் மூதாட்டி, மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சூர்யா ஹரிஜன் என்ற வயதானவர் என்பது தெரியவந்துள்ளது. இவரது மூத்த மகன் வேறு மாநிலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. தற்போது அந்த மூதாட்டி தனது இளைய மகனின் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
ஏழ்மையான குடும்பம்
ஓய்வூதியத்தை வாங்குவதற்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற அவர் தற்போது கால்நடைகளை மேய்த்து தனது வாழ்க்கையை நடத்துவதாக கூறப்படுகிறது. அவரது குடும்பம் உழுது விவசாயம் செய்ய நிலம் இல்லாத நிலையில், குடிசையில் வசித்து வருகின்றது. இதனால் அவரை வங்கி வரை அழைத்து சென்று பணத்தை வாங்கி வர வீட்டில் ஆள் இல்லாததாலும், வாகனங்கள் இல்லாததாலும் இந்த நிலை என்று கூறப்படுகிறது.
கட்டைவிரல் பதிவுகளுடன் பொருந்தவில்லை
அதுமட்டுமின்றி இவ்வளவு தூரம் அதனை வாங்க சிரமப்பட்டு சென்றவர் வெறுங்கையோடு திரும்பி வந்ததுதான் சோகத்தின் உச்சகட்டம். அந்த மூதாட்டியின் ஓய்வூதியப் பணத்தைப் பெற வங்கிக்குச் சென்றபோது, அவரது கட்டைவிரல் பதிவுகளுடன் பொருந்தவில்லை என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் அவர் பணத்தை பெறாமலேயே அதே போல சிரமப்பட்டு திரும்ப வீட்டிற்குத் வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ரூ.3,000 கொடுத்த வங்கி
இந்த சம்பவத்திற்கு பதிலளித்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மேலாளர், மூதாட்டியின் "விரல்கள் உடைந்ததால்" பணத்தை எடுப்பதில் சிக்கலை எதிர்கொள்வதாகவும், சிக்கலை தீர்க்க வங்கி செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். "அவருடைய விரல்கள் உடைந்துள்ளன, அதனால் அவர் அவரது பணத்தை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சூழ்நிலை தெரிந்தபின், அவருக்கு வங்கியில் இருந்து ரூ. 3,000 கொடுக்கப்பட்டுள்ளது. அக்கவுன்டில் உள்ள சிக்கலை விரைவில் தீர்ப்போம்" என்று எஸ்பிஐ வங்கி, ஜாரிகான் கிளையின் மேலாளர் கூறினார். கிராமத்தில் உள்ள ஆதரவற்றவர்களை பட்டியலிட்டு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து ஆலோசித்ததாக அவரது கிராம தலைவர் கூறியுள்ளார்.