அசெர்பைஜான் நாட்டிற்குத் தனியாக பயணம் செய்த தன் சகோதரரைக் காணவில்லை எனக் கூறி ஒருவர் பிரபல இன்ஸ்டாகிராம் பக்கமான `ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பே’ பக்கத்தில் அதுகுறித்து தெரிவித்துள்ளார். அதனை இங்கே அவர் தெரிவித்தவற்றைப் பகிர்ந்துள்ளோம்... 


`கடந்த ஏப்ரல் 26 அன்று, எனது 28 வயதான சகோதரன் மணிகாந்த் கொண்டவீட்டி தனியாக அசெர்பைஜான் நாட்டிலுள்ள பாகு பகுதிக்குப் பயணம் செய்துள்ளார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, எதிர்பாராத சம்பாவிதம் ஏதோ நிகழ்ந்துள்ளது. கடந்த மே 12 அன்று. மணிகாந்த் எங்கள் வாட்சாப் மெசேஜ்களுக்கு பதில் அனுப்பவில்லை. மேலும் அவர் வெளிநாட்டில் இருப்பதால் இது எங்களைக் கடுமையாக கவலை கொள்ள வைத்தது. 


மணிகாந்த் அட்வெஜ்சர் பிரியர் என்பதால் எங்கேனும் ட்ரெக்கிங் சென்றிருக்கலாம், சென்ற இடத்தில் அவருடைய மொபைல் நெட்வொர்க் பணி செய்யாததால் மீண்டும் தனது ஹோட்டலுக்குத் திரும்பிய பிறகு நம்மை அழைப்பார் என்றே நாங்கள் கருதிக் கொண்டிருந்தோம். 



சுமார் 48 மணி நேரங்களுக்குப் பிறகு, அவரது ஃபோனுக்கு எங்கள் மெசேஜ்கள் டெலிவர் ஆவது தடைப்பட்டது. இதனால் அவர் எங்கு இருக்கிறார் என்பதை எங்களுக்குத் தெரியாமல் போக, எங்கள் கவலை பயமாக மாறத் தொடங்கிறது. 


இறுதியாக அவருடன் மேற்கொண்ட உரையாடல்களின் அடிப்படையில், மணிகாந்த் அசெர்பைஜான் நாட்டின் ஜகாதாலா காட்டுப் பகுதிக்குச் செல்வதாகக் கூறியிருந்தார். மேலும், கடந்த மே 17 அன்று, அவருக்கு உஸ்பெகிஸ்தான் செல்வதற்கான விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும், அவர் விமானத்தில் ஏறவில்லை. மேலும், அவர் ஜகாதாலாவின் தங்கியிருந்த ஹோட்டலில் அவருடைய உடைமைகள் இன்னும் இருக்கின்றன. 






சுமார் இரண்டு வாரங்கள் கழிந்த பிறகும், மணிகாந்த் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அசெர்பைஜானின் பாகுவில் உள்ள இந்தியத் தூதரிடம் தொடர்புகொண்டு இதுதொடர்பாக பேசியுள்ளோம். அவர் அங்குள்ள காவல்துறையினர், அதிகாரிகள் ஆகியோரின் உதவியுடன் மணிகாந்தைத் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளார். 


மும்பையில் ஐடி துறையில் பணியாற்றும் என் சகோதரனைக் கடந்த ஏப்ரல் 26 அன்று டெல்லியில் இருந்து அசெர்பைஜானுக்கு பயணிக்கும் போது, வழியனுப்புவதற்காக சென்று சந்தித்தேன். அதுவே அவரை நான் கடைசியாக சந்தித்தது. 



என் சகோதரனுக்காக நாங்கள் அனைவரும் பயத்தோடு இருக்கிறோம். இந்தியாவின் வெளியுறவுத்துறை என் சகோதரனைக் கண்டுபிடிக்க கடும் முயற்சிகள் எடுத்து வருவதை அறிவோம். எனினும் எங்கள் கவலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அவர் மீண்டும் வீட்டுக்குப் பாதுகாப்பாக விரைவில் திரும்ப வேண்டும் என்பதே என் பிரார்த்தனையாக இருக்கிறது.’


இவ்வாறு அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அசெர்பைஜான் நாட்டில் காணாமல் போன மணிகாந்தின் சகோதரர் தரண் கொண்டவீட்டி இதனை எழுதியுள்ளார்.